உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

2

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

கூடு. * உயிரை மேலாகப் பொதிந்திருப்பது மெய்; தோல் நரம்பு எலும்பு தசை அரத்தம் முதலிய எழுவகைத் தாதுக்களால் யாக்கப்பெற்றிருப்பது அல்லது முடையப்பட்டிருப்பது யாக்கை அல்லது முடை; உயிர் நீங்கியபின் கட்டைபோலக் கிடந்து எரிவது அல்லது மண்ணொடு மண்ணாய்ப்போவது கட்டை.

உயிரில்லாத பொருள்கள் எத்தனையோ வேறுபட்ட வண்ணம் வடிவு அளவு சுவை முதலிய தன்மைகளையுடையனவாயிருந்தாலும், அவற்றையெல்லாம் உடம்பொடு தொடர்புபடுத்தி ஒன்றாகக் கொண்டு, அவற்றுக்கு உடம்பு அல்லது மெய் என ஒரே பெயரிட்டதற்குக் காரணம், அண்டத்தையொத்தது பிண்டம் என்றும், உயிரற்ற பொருளனைத்தும் ஐம்பூதச் சேர்க்கை அல்லது வேறுபாடென்றும், முன்னைத் தமிழர் அறிந்திருந்தமையே.

பொருள்களை யெல்லாம் இங்ஙனம் மூன்று வகையாய் வகுத்ததோடமையாது, உயிருள்ள பொருள்கட்குள்ளும் பகுத்தறிவுள்ளது இல்லது என மேலுமொரு பாகுபாடு செய்து, அதற்கேற்ப வினையீறு வேறுபடுத்திக் கூறிவந்தனர் பழந்தமிழர்.

விலங்கினத்திலும் பறவையினத்திலும் ஒருசார் மரங்கட் குள்ளும் ஆண் பெண் என்னும் பால் வேறுபாடிருப்பினும், அவ் வேறுபாடு கண்டு அவற்றுக்கு வெவ்வேறு பெயரிட்டு வழங்கினும், வினைகொடுத்துக் கூறும்போது, பகுத்தறிவற்ற உயிர்களின்பால் வேறுபாடு காட்டாது, 'காளை வந்தது', 'ஆ வந்தது', 'காளைகள் வந்தன', 'ஆக்கள் வந்தன' என எண் வேறுபாடு மட்டும் காட்டியும், பகுத்தறிவுள்ள உயிர்கட்கு ‘மகன் வந்தான்’, ‘மகள் வந்தாள்' என எண்ணோடு பாலுங் காட்டியும் வந்தனர் பழந்தமிழர்.

மக்கள் பகுத்தறிவுள்ள உயிரினமாயினும், அவருள் எல்லாரும் அதைப் பெறாமையால், பகுத்தறிவடையாத குழந்தைகளையும், பிள்ளைகளையும் ‘குழந்தை வருகிறது', 'பிள்ளை வருகிறது' எனப் பாலீறு கொடாது

எண்ணீறே கொடுத்துக் கூறியும், பருவமடைந்தவ ருள்ளும் பலர் பகுத்தறிவைப் பெறாமையால் அவரை ‘மாக்கள்' என்று பிரித்தும் வந்தது, பழந்தமிழரின் பெரும்புலமையை யுணர்த்தும்.

2.

"குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே-உடம்போடுயிரிடை நட்பு” என்றார் (குறள் 338) திருவள்ளுவர். "கூடுவிட்டிங் காவிதான் போயினபின்பு” என்றார் (நல்வழி,22) ஒளவையார்.