உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3

சொற்றொடரியல் - SYNTAX

1. சொற்றொடர் அமைப்பு (Structure of Sentence)

சொற்றொடர், தனிச்சொற்றொடர் (Simple Sentence), கூட்டுச் சொற்றொடர் (Compound Sentence), கலப்புச் சொற்றொடர் (Complex Sentence) என மூவகைப்படும். இம் மூன்றும் அல்லது இவற்றுள் இரண்டு சேர்ந்தது கதம்பச் சொற்றொடர் (Mixed Sentence) ஆகும்.*

எ - டு : பழம்பாண்டி நாடு முழுவதையும் கடல்கொண்டது எ-டு தனிச்சொற்றொடர்.

பழம்பாண்டி நாடு முழுவதையும் கடல்கொண்டது; அதன்பின், பாண்டியன் சோழநாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றினான் - கூட்டுச் சொற்றொடர்.

பழம்பாண்டி நாடு முழுவதையும் கடல்கொண்டதென்று சிலப்பதிகாரங் கூறுகின்றது - கலப்புச் சொற்றொடர்.

பழம்பாண்டி நாடு முழுவதையும் கடல்கொண்டது; அதன்பின், பாண்டியன் வடக்கே வந்தான் என்று தமிழ் நூல்கள் மிகத் தெளிவாய்க் கூறினும், சிலர் இதை ஒப்புக் கொள்கின்றிலர் - கதம்பச் சொற்றொடர்.

கூட்டுச்சொற்றொடரில், இரு சொற்றொடர் (Clauses) இருப்பின் இணைக்கூட்டு (Double) என்றும், பல சொற்றொடரிருப்பின் பல்கூட்டு (Multiple) என்றும் கூறப்படும்.

குறிப்பு : இலக்கணந் தெரியாத இளமாணவர் கதம்பச் சொற்றொடர் எழுதுதல் கூடாது.

சொற்றொடர் வகைகளின் வரையறவுகளை, அதாவது இயல்விளக்கங்களை (Definitions) உயர்தரக் கட்டுரை இலக்கணத்துட் கண்டுகொள்க.