உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

59

உலகறி சுட்டானால் இயற்பெயரின்றியுங் கூறப்படும், உலகமுழுதும் அறிந்த சுட்டு உலகறிசுட்டு.

எ-டு : அவனன்றி அணுவும் அசையாது.

இதில், அவன் என்பது ஆண்டவனைக் குறிக்குமென்று உலகமுழுதும் அறிந்திருப்பதால், அச் சொல் உலகறிசுட்டாகும். கண் முன்னுள்ள பொருள்களைச் சுட்டும்பெயர் இயற் பெயருக்கு முன்னும் பின்னும் வரலாம்.

எ-டு: அவன் முருகன், முருகன் அவன்;

அது மரம், மரம் அது

எண்ணுச் சொற்கள் பெயரைத் தழுவும்போது, இரண்டொரு சொற்களோடு சேர்ந்துவரின் அவற்றின் முன்னும், தெரிநிலைப் பெயரெச்சத்தில் முடியும் நெடுந்தொடரொடு சேர்ந்துவரின் அதற்குப் பின்னும், நிற்கும்.

எ-டு : ஒரு நல்ல பையன், ஒரு படிக்கிற பிள்ளை, இரு பழுத்த பழம், ஒரு கெட்ட குணம், மூன்று பெரிய வீடு, பத்து அழுகல் தேங்காய், ஒரு பொறுப்பு வாய்ந்த தலைவர்.

இம்மென்னு முன்னே எழுநூறும் எண்ணூறும் பாடும் ஒரு புலவர்.

இம்மென்னு முன்னே எழுநூறும் எண்ணூறும் பாடும் ஒரு சிறந்த தமிழ்ப் புலவர்.

ங்ஙனமன்றி, நல்ல ஒரு பையன், பழுத்த இருபழம் என்று வரா. இதிலிருந்து, ஒரே சொல்லொடு கூடி வரும்போதெல்லாம் எண்ணுச்சொல் முன்நிற்கும் என அறிந்து கொள்க.

பொறுப்பு வாய்ந்த ஒரு தலைவர் என்றும் கூறலாம்.

தழுவப்படுவது அஃறிணைப் பெயராயின், நல்லது என்னும் குறிப்பு வினையாலணையும் பெயருக்குப் பின் எண்ணுச் சொல் வரலாம். எ-டு : நல்லதொரு காலம்.

ஒரு நல்ல வேலை செய்கிற பிள்ளை, வேலை செய்கிற ஒரு நல்ல பிள்ளை, என்னும் தொடர்கள் பொருள் வேறுபடுதலால், அவ்வப் பொருட்குத் தக்கவாறு எண்ணுச்சொற்களை நிறுத்தல் வேண்டும்.

எண்ணுச் சொற்களோடு கூடிவரும் பல சொற்கள் பிளவுபடா திசைப்பின், அவற்றுக்கு முன்னரே எண்ணுச்சொல் நிற்றல் வேண்டும்.