உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




15

குற்றமுந் தண்டனையும்

குற்ற வகை: குற்றங்கள், அறநூலுக்கு மாறானவும், அரசியலுக்கு மாறானவும், தெய்வத்திற்கு மாறானவும் என மூவகைப்படும்.

குடி பொய் களவு காமம் கொலை என்பன அறநூலுக்கு மாறானவை. வை ஐம்பெருங் குற்றம் எனப்படும். பிறரிடம் வாங்கினதை மறுத்தலும், தன்னிடத்துள்ள பிறர் பொருளை ஒளித்தலும், கள்ளக் கையெழுத்தும், ஆள்மாறாட்டமும் பொய்யுள் அடங்கும்.

இறையிறுக்காமை, உறுபொருள் கவர்தல், பகையொற்று, அறை போதல், அரசனது பொருள் கவர்தல், அரசனது இன்பப் பொருள் நுகர்தல், ஊருக்கு அல்லது நாட்டிற்கு இரண்டகஞ் செய்தல், அரசற் கிரண்டகஞ் செய்தல், அரசாணை மீறல், கொள்ளையடித்தல், கலகஞ் செய்தல் என்பன அரசியற்கு மாறான குற்றங்களாம். புதையலும் பிறங்கடையில்லாச் சொத்தும் உறுபொருளாகும்.

ஒப்பிப் பணிசெய்யாமை, கோயிற் பொருட்கவர்வு என்பன தெய்வத்திற்கு மாறான குற்றங்கள். கோயிலில் விளக்கெரிப்பதைத் தண்டனையாகப் பெற்றவனும், கோயிலில் விளக்கெரிக்கப் பொன் பெற்றவனும், அங்ஙனம் எரிக்காமையும்; கோயிற் பண்டாரத்திற் பெற்ற கடனுக்கு வட்டியிறுக்காமையும்; ஒப்பிப் பணிசெய்யாமை யாகும். கோயிற் கலங்களையும் அணிகலங்களையும் களவாடலும், வழிபாட்டு விழாச் செலவைக் குறைத்தலும் அடியோடு நிறுத்தலும் கோயிற் பொருட் கவர்வாகும்.

மூவகைக் குற்றங்களுள்ளும், கடுமையானவை மேற்படு குற்றம் எனப்பட்டன.

தண்டனை வகை: தண்டனையானது, தண்டம், மானக்கேடு, வேதனைப்பாடு, சிறைப்பு, வேலைநீக்கம், கொலை என அறுவகைப் பட்டிருந்தது.

அவற்றுள், தண்டம் என்பது தொகையிறுப்பு, தண்டத் தீர்வை, கோயில் விளக்கெரிப்பு என மூவகை. தொகையிருப்பாவது