உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குற்றமுந் தண்டனையும்

95

ஒரு குறித்த தொகையை மொத்தமாய்ச் செலுத்தல். இனி, மன்று பாடு தண்டா குற்றம் என மூவகைத் தண்டமுங் கூறப்படும். அவை இன்னவென்று திட்டமாய்த் தெரியவில்லை.' மானக்கேடு என்பது, முகத்திற் செம்புள்ளி கரும்புள்ளி குத்திக் கழுதைமே லேற்றி ஆன்மயந் தோய்த்த அலகாலடித்து ஊர்வலம் வருவித்திலும், குலத்தினின்று விலக்கலும் ஆகும்.

வேதனைப்பாடு என்பது, தூணிற் கட்டிவைத்து 50 அடி முதல் 100 அடிவரை அடித்தல், கல்லேற்றல், வெயிலில் நிற்பித்தல், கிட்டி பூட்டல், நடைவிளக்கெரித்தல் எனப் பலவகைப்படும். கிட்டி என்பது கெண்டைக்காலை நெருக்கும் ஒருவகைக் கருவி. நடை விளக்கெரித்தல் என்பது, தலையில் அகல்விளக்கேற்றி ஊர்வலம் வருவித்தல்.

சிறைப்பு என்பது, தலையிட்டுச் சிறைக் கோட்டத்தில் வைத்தல், கொலை என்பது, வெட்டல், கழுவேற்றல், விலங்காற் கொல்வித்தல், சித்திரவதை செய்தல் என நால்வகை. யானையை விட்டு மிதிப்பித்தலும் புலிக்கருத்துதலும் போல்வன விலங்காற் கொல்வித்தல். எருமைக் காலிற் கட்டியோட்டுதலும் வண்டி ச் சக்கரத்திற் கட்டியோட்டுதலும் போல்வன சித்திரவதையாகும்.

குற்றத் தண்டனை: மூவகைக் குற்றவாளியர்க்கும் குட வோலையிடப்பெறாமை பொதுத் தண்டனையாகும். கட்குடிக்கு இது தவிர வேறு தண்டனையில்லை.

அறநூலுக்கு மாறான குற்றங்களுள், பொய்க்குத் தண்டமும்; களவிற்குப் பொருள் மீட்பொடு மானக்கேடும், பொருள்மீட்கப் பெறா விடத்துத் தண்டமும், தண்டம் இறுக்கப்படாவிடத்துச் சிறையும்; காமத்திற்கு மானக்கேடும் கொலைக்குக் கொலையும்; தண்டனை யாகும்.

கொலை செய்தவன் ஓடிப்போனவிடத்து, அவன் சொத்து முழுதும் பறிமுதலாகிக் கோயிற்குச் சேர்க்கப்பட்டது. ஓடிப்போன கொலைஞனைக் கொல்வதற்குப் பொதுமக்கட்கும் உரிமையிருந்தது. கொலைஞன் கொலையுண்டபின், அவனது பறிமுதலான சொத்தைப் பிறங்கடையான் வேண்டிப் பெற்றுக்கொள்ள முடியும். தற்செயலாய் நேர்ந்த கொலைக்குக் கோயில் விளக்கெரிப்பே தண்டனையாக விதிக்கப்பட்டது. கொலையானது விரும்பிச் செய்யப்பட்டவிடத்தும், கொலைஞன் மகன் கொலையுண்டவனின் நெருங்கியவுறவினரொடு ஒப்பந்தஞ் செய்து கொள்ளின், தண்டனை நீங்க இடமிருந்தது.

1. ஒருகால் தொகையுறுப்பு முதலிய மூன்றே மன்றுபாடு முதலிய மூன்றாக விருந்திருக்கலாம்.