உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

பழந்தமிழாட்சி

நீளமும் பதின்மூன்று முழச் சுற்றளவு முள்ளதும், சிறிய கண்ணும் சிவந்த புள்ளிகளுமுடையதும், உடலின் பின்புறத்திலும் முன்புறம் ஏற்றமாயிருப்பதுமான களிற்றியானை அரசுவாவாதற்குத் தக்கதாம்

(பிங்கலம்).

அரசுவாவிற்கும், இடுகுறி போன்ற இயற்பெயரும் காரணக் குறியான சிறப்புப்பெயரும் இடப்பெறும்.

(14) தேர்: அரசன் ஊருந்தேர், மற்றத் தேர்களினும் உயர்ந்தும், ஓவிய வேலைப்பாடமைந்தும், விலையுயர்ந்த அணிகலங்களும் சிறந்த குதிரைகளும் பூட்டப்பெற்றும் இருக்கும்.

பொதுவாக அரசன் ஊரும் ஊர்திகள் மூன்றும், அரச மாண்பிற் கேற்ப, ஒப்புயர்வற்ற ஆடையணியலங்கரிப் புடையன வாயிருக்கும்.

சங்ககாலத்தில், வேட்டைக்குத் தேரிலும் குதிரை மேலும் செல்வதும், போரும் நகர்வலமும் நாடுகாவலும் ஆகிய பிறவற் றுக்குத் தேரிலும் தேர் செல்லாவிடத்து யானை மேலும் செல்வதும், அரசர்க்கு வழக்கமாயிருந்தது. பிற்காலத்தில் தேர் பயன்படுத்தப் பெறாமையால், வேட்டை தவிரப் பிறவற்றிற்கெல்லாம் யானை மீதே அரசர் சென்றனர்.

(15) மனை: அரசன் வாழும் மனை அரண்மனை எனப்படும். மதிலும் கோபுரமுஞ் சுருங்கையுமாகிய அரணுடைமைபற்றி, அது அரண்மனை யெனப்பட்டது. அதற்குக் கோயில் பள்ளி நகர் மாளிகை எனப் பிற பெயர்களு முண்டு.

"படையுங் கொடியுங் குடையும் முரசும் நடைநவில் புரவியுங் களிறுந் தேரும் தாரு முடியும் நேர்வன பிறவும்

தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய"

(1571)

என்னுஞ் சூத்திரத்தில், தொல்காப்பியர் படையையும் அரசச் சின்னங்களுடன் சேர்த்துக் கூறினர். அது 'படையும் பாதுகாப்பும்' என்னும் அதிகாரத்திற் கூறப்பெறும்.

அரசச் சின்னங்கள்: முடி, குடை, கவரி, தோட்டி, முரசு, சக்கரம், யானை, கொடி, மதில், தோரணம், நீர்க்குடம், பூமாலை, சங்கு, கடல், மகரம், ஆமை, இணைக்கயல், சிங்கம், தீபம், இடபம், ஆசனம் என 21 வகைப்படுவதாகச் சூடாமணி நிகண்டு கூறும். இவற்றுட் பல மங்கலப் பொருள்களும் அரணும் உவமையுமாதலின், அவை இங்குக் கூறப்பெறவில்லை.