உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

பழந்தமிழாட்சி

அரண்மனைக் காரியங்களை மேற்பார்ப்பவனுக்கு மாளிகை நாயகம் (Seneschal or Chamberlain) என்றும், அரண்மனைக் கணக் கழுதுபவனுக்குத் திருமுகக்கணக்கு என்றும் பெயர். அரண்மனை வேலையாள்கள் அகப்பரிவாரம் என்றும், அரசனோடு நெருங்கிப் பணிசெய்வார் அணுக்கச்சேவகம் என்றும், அரசனுக்குப் பக்கத்தில் நின்று ஏவல் கேட்போர் உழைச்சுற்றாளர் என்றும், அழைக்கப் பெறுவர். அரசனுக்குக் கவரி ஆலவட்டம் முதலியன வீசுவாரும், குடை கொடி முதலியன பிடிப்பாரும், அடையாளக்காரர் எனப்படுவர்.

அரசனுக்கு ஊக்கமும் மறமுங் கிளருமாறு, அவனுடைய முன்னோரின் அருந்திறற் செயல்களை எடுத்துக்கூறி, அவன் குடியைப் புகழ்வதற்கு, ஓவர் அல்லது ஏத்தாளர் என்று சொல்லப் படும் பாடகர் பலரிருந்தனர். அவர் சூதர் மாகதர் வேதாளிகர் (வைதாளிகர்) எனப் பலவகையர். சூதர் நின்றேத்துவார் என்றும், மாகதர் இருந்தேத்துவார் என்றும் சொல்லப்படுவர். வைகறையில் அரசன் பள்ளியறைக்குப் புறம்பே நின்று, அவன் குடியைப் புகழ்ந்து பாடி, அவனை இனிதாகத் துயிலுணர்த்துபவர் சூதர் ஆவர். இங்ஙனம் பாசறையில் அரசனைத் துயிலுணர்த்துபவரை, அகவர் என்று மதுரைக்காஞ்சி கூறும்.

அரசனுடைய ஆணைகளை அவ்வப்போது காளமூதிப் படை கட்குத் தெரிவிப்பவன் படையுள் படுவோன் அல்லது சின்னமூதி எனப்படுவான். அவனுக்குப் படைக்கிழவன், சிறுக்கன், படைச்சிறுக்கன், படைச்சிறுபிள்ளை என்றும் பெயருண்டு.

அரசன் அரண்மனைக்கு வெளியே நகரிலும் நாட்டிலும் செல்லும்போதெல்லாம், அவனுடைய பரிவாரத்திற்கு முன்சென்று, அவன் வருகையைக் கூறி மக்களை வழியினின்றும் விலக்குபவனுக் குக் கட்டியங்காரன் (Herald) என்று பெயர்.

அரசன் தலைநகரிலிருக்கும்போதும் நாடுகாவன் மேற் செல்லுமிடத்தும், அவனொடு கூடவேயிருக்கும் அரசியல் வினை வட்டத்தார்க்கு, உடன்கூட்டம் என்றும் உழையர் என்றும் பெயர். அவருள் அதிகாரிகளாயிருப்பார் உடன் கூட்டத்ததிகாரிகள் எனப்படுவர். வினையாற்றும் வேளையில் அரசனைச் சூழ்ந்திருக்கும் பரிவாரம், ஏவற்பரிவாரம் காவற் பரிவாரம் வினைப்பரிவாரம் என

முத்திறப்பட்டிருக்கும்.

அரசியல், அல்லது அரண்மனைத் தொடர்பான, உணவு உடை உறையுள் உண்கலம் அணிகலம் ஊர்திகள் தட்டுமுட்டுகள் முதலிய பல்வகைப் பொருள்களையும், பணியாள்களைக்கொண்டு