உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

படையும் பாதுகாப்பும்

1. படை

ஒரு நாட்டு அரசியற்குப் படையே அடிப்படை. படை யிருப்பின், நாடில்லாதவனும் நாட்டைப் பெறலாம். படையில்லா விடின், நாடுடையவனும் அதை இழப்பான். ஆதலின், படையானது அரசனுக்கு இன்றியமையாத வுறுப்பாகும். இதனாலேயே, அரசர்க் குரியவற்றைக் கூறும் தொல்காப்பியச் சூத்திரத்திலும் (1571), அரசுறுப்புகளைக் கூறும் குறளிலும் (381), சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல் என்னும் உத்திபற்றிப் படை முற்கூறப்பெற்றது. இளங்கோவடிகள் சேனையை அரசன் திருமேனி என்றனர் (சிலப். 25:191). அரசர் தொழிலாகிய காவல் போர் என்னுமிரண்டும் படை இன்றியமையாமையின்,

உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையு ளெல்லாந் தலை

என்றார் திருவள்ளுவர்.

(குறள்.761)

படை வகைகள்: படையானது, பொரும் இடம்பற்றி,

(1) நிலப்படை(Military)

(2) கடற்படை (Navy)

என இருவகைப்படும். இவற்றுள் நிலப்படை, ஊர்திபற்றி,

(1) கரிப்படை

(2) பரிப்படை

(3) தேர்ப்படை

(4) காற்படை அல்லது காலாட்படை,

என நால்வகைப்படும். இவற்றுள், காலாட்படை மீண்டும் கருவி பற்றி,

(1) விற்படை

(2) வாட்படை

(3) வேற்படை