உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

பழந்தமிழாட்சி

ஈரதிகாரிகட்கும், இரு சிற்றரசர்க்கும் இடைப்பட்ட வழக்காயின், அவ் வழக்காளிகள் தலைநகர்க்கு வந்தவிடத்து அரசனே தீர்த்து வைப்பதும், அவர் வராது அரசனுக் கறிவித்த (அல்லது அவனிடம் முறையிட்ட) விடத்து அதைத் தீர்க்கும்படி அவன் ஓர் அதிகாரியை அனுப்புவதும் வழக்கம். வன்கொலையும் முறைகேடான கொலைத் தண்டமும் நிகழ்ந்தவிடத்துக் கொலையுண்டாரின் ஆருயிர்க் கேளிர் அரசனிடம் முறையிடுதற் பொருட்டுச் சோழர் அரண்மனைப் புறவாயிலில் ஆராய்ச்சி மணி கட்டப்பட்டிருந்தது.பாண்டிநாட்டில் அஃதில்லையாயினும், பாண்டியர் காட்சிக் கெளியராயிருந்து அத்தகைய முறையீடுகளைக் கேட்டு முறைவழங்கி வந்தனர் என்பது, கண்ணகி முறையீட்டா லறியப்படும். இனி, கடினமான வழக்கின் உண்மை காண்டற்கு இறைவன் திருமுன் பாடுகிடப்பதும், மாறுகோலம் பூண்டு சென்று பொதுமக்கள் கூற்றைக் கவனிப்பதும் பாண்டியர் வழக்கம்.

அரசன் தன் நாட்டு நிலைமையைப்பற்றி அமைச்சர் வாயிலா கவும், பிறர் நாட்டு நிலைமையைப்பற்றித் தூதர் வாயிலாகவும், இரண்டையும் பற்றி ஒற்றர் வாயிலாகவும், அடிக்கடி அறிந்து வருவன். ஒற்றருள் ஒருவன் கூற்றை அவனறியாது இன்னொருவன் கூற்றொடு ஒப்புநோக்கி, மூவர் கூற்றும் ஒத்தவிடத்தே அதை அரசன் நம்புவான்.

தன்நாட்டு நிலைமையையும் தன் நகர நிலைமையையும் தானே அறிவான் வேண்டி, இடையிடை நாடுகாவற் சுற்றுப் போக்குச் செல்வதும் மாறுகோலம் பூண்டு நகரநோட்டஞ் செய்வதும் அரசன் வழக்கம். விக்கிரமச் சோழன் 1122-ல் குடந்தைக்கருகிலுள்ள பழையாறையிலும், 1123-ல் செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த குனிவள நல்லூரில் ஒரு குளக்கரை மண்டபத்திலும், 1124-ல் தென்னார்க் காட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வீரநாராயணச் சதுர்வேதிமங்கலம் என்னும் காட்டுமன்னார் கோயிலில் உள்ள அரண்மனையிலும், 1130-ல் தில்லைக் கருகில் ஓர் அரண்மனையிலும் இருந்ததாகக் கல்வெட்டுக் கூறுவதால், அவன் அடிக்கடி நாடுகாவற் சுற்றுப்போக்குச் சென்றமை அறியப்படும். மதுரையில் பொற்கைப் பாண்டியன் மாறுகோலம் பூண்டு நகர நோட்டம் செய்து, கீரந்தை ஊரிலில்லாத போது அவன் வீட்டிற்குக் காவலாயிருந்து வந்தது நூற்புகழ் பெற்ற செய்தியாகும்.

அரசன் தன் நாடுகாவற் சுற்றுப்போக்கில், ஆங்காங்குள்ள அதிகாரிகள் தம் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுகின் றார்களாவெனக் கவனிப்பதும், ஊர்ச்சபையாரும் அறங்கூறவையத் தாரும், தீர்க்கமுடியாத வழக்குகளைத் தீர்த்துவைப்பதும்