உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மலையாளம்

மலையாள நாட்டெல்லை

31

மேற்குத் தொடர்ச்சி (குட) மலைக்கு மேற்கே, வடக்கில் மங்களூரி(மங்களபுரம்)லிருந்து தெற்கில் திருவனந்தபுரம் வரைக்கும், தென்கன்னடம் மலபார் கொச்சி திருவிதங்கோடு (திருவாங்கூர்) என்னும் நான்கு சீமைகளில் தாய்மொழியாகப் பேசப்படுவது மலையாளம்.

தென்னை மரத்தின் வடமொழிப் பெயராகிய நாளிகேரம் என்பது, கேரம் என முதற்குறையாய்ப் பின்பு கேரளம் என விரிந்து அம் மரம் மிகுதியாய் வளரும் மலையாள நாட்டைக் குறித்ததென்பது பொருந்தக் கூறும் பொய்ம்மைக் கூற்றாகும். வடமொழிக்கும் வடமொழியாளர்க்கும் உயர்வும் அதனால் தமிழுக்கும் தமிழர்க்கும் இழிவும் கற்பிக்கப்பட்ட புராணக் காலத்தில், வடமொழித் தொடர்பை உயர்வென மயங்கிய மலையாள நாட்டார், கேரளம் என்னும் பெயர்க்கு வடமொழி மூலத்தையும், கேரள நாட்டிற்குப் பரசுராமக்ஷேத்திரம் என்னும் புதுப்பெயரையும் மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டனர். பரசுராமர்க்கு முந்தியே வழங்கிய பெயர் சேரநாடு என்பதும், அவர் இறுதிக் காலத்தில் தவஞ் செய்த இடமாகக் கூறியிருப்பது சேரநாட்டிற்கு வடக்கிலுள்ள கடற்கரைப்பகுதி யென்பதும் அறிதல் வேண்டும்.*

பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு நம்பூதிரிப் பார்ப் பனரால் இயற்றப்பட்டதாகத் தெரிகின்ற கேரளோ என்னும்

புராணத்தில், பிராமணர் பஞ்சாபினின்று பரசுராமரால்

தென்கன்னடத்திலுள்ள கோகர்ணத்தில் முதல் முதல் குடியேற்றப் பட்டனர் என்னும் செய்தி கூறப்பட்டுள்ளது. இதை S. சீனிவாச ஐயங்கார் தமது ‘தமிழாராய்ச்சி' (Tamil Studies) என்னும் நூலில் (ப. 348) மறுத்து, பிராமணரைக் கோகர்ணத்தில் குடியேற்றியவன் கடம்ப மரபினரின் முதல்வனான மயூரவர்மன் என்றும், அவன் காலம் கி.பி. 6ஆம் நூற்றாண்டின் முற்பகுதியென்றுங் கூறி யுள்ளார். ஆண்டுக் காண்க.

பண்டைச் சேரநாடு கூர்ச்சரம் (குஜரத் வரையில் தொடர்ந்திருந்ததாலும், வடநாட்டு ஆரியர் தென்னாட்டிலும் வந்து குடி புகுந்ததாலும், பரசுராமர் தவஞ்செய்த இடத்திற்கு ஏற்பட்ட ‘பரசுராம க்ஷேத்திரம்’ என்னும் பெயர் அவ்விடத்தோடு தொடர்ந்த தென்பாகத்தையும் பிற்காலத்தில் தழுவலாயிற்று. இந்து (சிந்து) என்னும் வடநாட்டுப் பகுதியின் பெயர் தென்னாட்டையும் தழுவினாற்போல.