உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மலையாளம்

35

மலையாளத்திலுள்ள பழைமையான ஊர்ப் பெயர் களெல்லாம் இன்றும் தனித்தமிழாயே யிருக்கின்றன. கோடு (கோழிக்கோடு Calicut), சேரி (தலைச்சேரி), குளம் (எர்ணாக் குளம்), புரம் (அங்காடிபுரம்), நாடு (வலையநாடு), ஊர் (கண்ணனூர்), குன்றம் (பூங்குன்னம்),கா (கன்னங்காவு), காடு (பாலைக்காடு - Palghat), குடி (சாக்குடி), வாசல் (பள்ளிவாசல்), அங்காடி (பரப்பனங்காடி), தோட்டம், பாடி, துறை (திருப்புனித்துறை), குறிச்சி, ஏரி, கரை (கொட்டாரக் கரை), களம் (திருவஞ்சைக் களம்), இருப்பு முதலியன தனித்தமிழ் ஊர்ப் பெயரீறுகளாம். கோடு = மலை. கா= சோலை.

பழஞ்சேரநாட்டின் கீழ்ப்பகுதியின் தென்பாகம் (கொங்கு நாடு) இன்றும் தமிழ்நாடா யிருக்கின்றது; வடபாகத்திற் கன்னட புகுந்துள்ளது.

12ஆம் நூற்றாண்டில் கொடுந்தமிழ் நாடுகளாகக் குறிக்கப்பட்ட வேணாடு, பூழி நாடு, குட்ட நாடு, குட நாடு, மலை நாடு என்பன இற்றை மலையாள நாட்டுப் பகுதிகளாயுள்ளன.

"பூழியன் உதியன் கொங்கன் பொறையன் வானவன் கட்டுவன் வான வரம்பன்

வில்லவன் குடநாடன் வஞ்சி வேந்தன்

கொல்லிச் சிலம்பன் கோதை கேரளன் போந்தின் கண்ணிக்கோன் பொருநைத் துறைவன்

சேரன் மலையமான் கோச் சேரன் பெயரே

என்பது திவாகரம்.

இவற்றுள் கொங்கன், கொல்லிச் சிலம்பன், பொருநை (ஆன்பொருநை)த் துறைவன் என்னும் பெயர்கள், கோயம்புத்தூர் சேலம் ஆகிய இரு கோட்டகங்களும் சேரநாட்டைச் சேர்ந்தன என்பதை விளக்கும். கொங்கன் = கொங்கு நாட்டரசன். கொங்கு நாடு கோயம்புத்தூர்க் கோட்டகப் பகுதி. கொல்லிமலை சேலங் கோட்டகத்தைச் சேர்ந்தது. சேரர் குடியில் ஒரு கிளையினரான அதிகமான் மரபினர் சேலத்தைச் சேர்ந்த தகடூரை (தர்மபுரியை)த் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

குற்றியலுகரத்தைப் புள்ளியிட்டுக் காட்டல், திதியைப் பக்க மென்றல் முதலிய பழந்தமிழ் வழக்கங்கள் இன்றும் மலையாள நாட்டில் தானுள்ளன.