உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

தமிழர் மதம்

மந்திரம் என்னும் சொல் வரலாற்றைப் பக்கம் 75-ல் காண்க.

முற்றத் துறந்த முழு முனிவர் தம் தூய வுள்ளத்தின் எண்ண வலிமையால் ஆய்ந்து கூறும் மெய்ம்மொழி, நிறைமொழி மாந்தரின் நிறைவேறுங் கூற்று.

மந்திரம் வாய்மைபற்றியும் வாய்ப்பது பற்றியும் வாய்மொழி யெனவும் படும்.

சிவனியச் சார்பான திருமந்திரமும் மாலியச் சார்பான திருவாய் மொழியும் தமிழில் உள்ளன.

தத்துவமசி

ஓகநிலைக்குரிய 'தத்துவ மசி' என்னும் சொற்றொடரைப் பெருங் கூற்றியம் (மகா வாக்கியம்) என்று வடமொழியாளர் பறை யறைவர். அது முற்றும் தென்சொற் றிரிபென்பதை அவர் அறியார். தத் + த்வம் + அஸி = தத்த்வமஸி.

தான், தாம் என்னும் பெயர்கள், முதற்காலத்தில் ஒருமையும் பன்மையுங் குறித்த படர்க்கைச் சுட்டுப்பெயர்களாக விருந்து, அகர வடி கொண்ட ஐம்பாற் படர்க்கைச் சுட்டுப்பெயர்கள் தோன்றிய பிற்காலத்தில், தற்சுட்டுப் பெயர்களாக (Reflexive Pronouns) மாறின.

தான் (அவன், அவள், அது.) - ச. தத் = அவன், அவள், அது. ஒ.நோ : திருமகன் - திருமான் - ச. ஸ்ரீமத். OE.,thae E. that.

ஊன், ஊம் என்னும் முன்னிலைப் பெயர்கள், நூன், நூம் என்று நகர மெய்ம்முதல் பெற்று, பின்னர் நீன், நீம் எனத் திரிந்தன.

நூன், நூம் என்பன, வடதிரவிடத்துள் ஒருவகையான சூரசேனிப் பிராகிருதத்தில் தூன், தூம் என்று திரிந்து, இன்று அதன் வழிப்பட்ட இந்தியில் தூ, தும் என்று வழங்குகின்றன.

தூ (நீ) என்னும் இந்தி வடிவமே, இயல்பாகவும் குறுகியும் மேலை ஆரிய மொழிகளில் வழங்குகின்றது.

OE, OS. thu, OHG. du, ON. thu, Goth. thu, L. tu, E. thou.

ஏன், ஏம் என்பவற்றிற்கும் நான் நாம் என்பவற்றிற்கும் இடையே, யான் யாம் என்பவை இருப்பதுபோன்றே, ஊன் ஊம் என்பற்றிற்கும் நூன் நூம் என்பவற்றிற்கும் இடையே, யூன் யூம் என்பனவும் இருந்தன.

இவ் யகர அடியினின்றே ஆங்கில சாகசனீயம் யீ (ye) அல்லது யூ (you) என்னும் முன்னிலைப் பன்மைப் பெயரைத் தோற்றியுள்ளது.