உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(1) பேய் வகைகள்

1

குமரிநிலை யியல்

1. சிறுதெய்வ வணக்கம்

திடுமென்று கொலையுண்டவர் அவர்க்குக் குறித்த வாழ் நாளெல்லை வரையும், வரம்பிறந்த கொடியோரும் தூய பெரி யோராற் சாவிக்கப்பட்டவரும் நெடுங்காலமும், இறந்தபின் பேயாய்த் திரிவ ரென்பது, பொதுவான கருத்து.

அலகை, அள்ளை, இருள், கடி, கருப்பு, காற்று, குணங்கு, கூளி, மண்ணை, மயல்(மருள்) என்பன பேயின் பொதுப்பெயர்கள். பேய்களுள் நல்லனவும் உள; தீயனவும் உள.

குறளி (கருங்குட்டி), பேய், கழுது, பூதம், முனி (சடைமுனி), அரமகள், அணங்கு எனப் பேயினம் பலதிறத்ததாகச் சொல்லப் படும். குறளியைக் குட்டிச் சாத்தன் என்பர். பேய்களுட் காட்டேறி தூர்த்தேறி முதலிய பலவகைக ளிருப்பதாகக் கூறுவர். பூதங்கள் குறும்பூதம் பெரும்பூதம் என ரு வகைய.

"குண்டைக் குறட்பூதம்” (தேவா. 944:1). அரமகளைத் தேவ மகள் என்று, அரைத் தெய்வத்தன்மை கொண்ட ஒரு தனியினமாகக் கூறுவது இலக்கிய வழக்கு. அரமகளிர்(nymphs), மலையர மகளிர் நீரர மகளிர் என இருவகையர். இருவகையரும் அடுத்த மாந்தரை அச்சுறுத்திக் கொல்வதால், சூரர மகளிர் எனப்படுவர். சூர் என்பது அப் பெயர்க் குறுக்கம்.

"எக்கர் நண்ணிய எம்மூர் வியன்றுறை நேரிறை முன்கை பற்றிச்

சூரர மகளிரோ டுற்ற சூளே"

(குறுந்.53)

பன்மையிற் குறிக்கப்பட்டதனால், அவர் கூட்டங் கூட்டமாக வாழ்வதாகக் கொள்ளப்பட்டனர் போலும்!

அணங்கு என்பது, தன் அழகு மிகுதியால் ஆடவரை மயக்கிக் கொல்லும் பெண்பேய். 'தாக்கணங்கு" என்றார் திருவள்ளுவரும் (குறள். 1082).