உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

தமிழர் மதம்

என்னும் முருகன் பெயர் குழவி என்றும் பொருள்படுதலாலும், முருகன் குமரன் என்னும் பெயர்கள் இளமைபற்றியவையாதலா லும், முருகனைத் தமிழரே சிவன் மகனாகக் கொண்டுவிட்டதாகத் தெரிகின்றது. இது, பாலைநிலத் தெய்வமாகிய காளியைச் சிவன் தேவி யாக்கியது போன்ற, சிவமத விரிவளர்ச்சி.

முருகனும் சிவனும் நிறத்தில் ஒத்தவரேனும், பருவம் வடிவம் தோற்றம் தேவி மாலை படைக்கலம் ஊர்தி அணி வழிபாட்டு முறை முதலியவற்றில், முற்றும் வேறுபட்டவ ராவர். வெறியாட்டு, காவடி யெடுப்பு, காவு கொடுப்பு, முருக வள்ளியர் இளமையும் அழகும், அவர் மயிலூர்தி முதலியன பொதுமக்கள் உள்ளத்தை முற்றுங் கவர்ந்து விட்டன. அதனால், காளி சிவன் தேவியான பின்பும் தனியாக வணங்கப்பட்டதுபோல், முருகன் சிவன் மகனான பின்பும் தனியாக வணங்கப்பட்டான். புலவர் முருகனைச் சிவனோ டொப்பக் கொண்டு, வீடளிப் பதிகாரமும் அவனுக்குரிமைப் படுத்தினமை, திருமுருகாற்றுப்படையால் அறியப்படும்.

முருகன் முளைமந்திரப் பொருளைச் சிவனுக்கு விளக்கிக் கூறி, அதனால் தன் தந்தைக்குக் குரு(தகப்பன்சாமி) ஆனான் என்பதும், முருகசிவர் சமன்மையை உயர்வுநவிற்சியாற் காட்டும்.

முருகனுக்குப் பிணிமுகம் என்னும் யானையை நிலவூர்தி யாக்கினது புலவர் செயல் போலும்!

முருகனுக்கு மேலும், ‘விநாயகன்' என்னும் ஆனைமுகவனை ஆனைமுக வசுரன் கதையாலும், வீரபத்திரனைத் தக்கன் வேள்வி யழிப்புக் கதையாலும், வைரவனைப் பிரமன் தலை கொய்வுக் கதையாலும், சிவன் மக்களாகப் படைத்துக்கொண்டனர் ஆரியர். அவர்களை மக்கள் என்னாது மேனி வடிவுகள்(மூர்த்தங்கள்) என்பர் சற்றுத் தெளிந்தோர். ஆயினும், நடைமுறையில் வேறுபாடொன்று மில்லையாம்.

இனி, சாத்தன் என்னும் ஐயனாரையும், சிவமாலன்(சங்கர நாராயணன்) என்னும் புணர்ப்பில் தோன்றிய மகனாகக் கூறி, அவனை அரியரன் புதல்வன்(ஹரிஹர புத்ர) என்றனர்.

மேற்குறித்த கதைகளெல்லாம் கட்டுச் செய்திகளே யன்றி, உண்மையாக நிகழ்ந்தவை யல்ல. இறைவன்(சிவன்) வடிவான ஓங்காரம் வரிவடிவில் யானை யுருவத்தை யொத்திருப்பதால், அதினின்று தோன்றியதாகக் கூறிய வடிவை யானை வடிவாகவே காட்டி விட்டனர். மேலும், அதற்குப் பெருச்சாளியை(பெருத்த எலியை) ஊர்தியாக்கினது, சிறுபிள்ளையின் உத்திக்கும் பொருந் தாச் செய்தியாம்.