உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருநர் - போர்மறவர். சொல்லேருழவர் - புலவரும் அரசியலறிஞரான அமைச்சரும். பொருநர் உடல்வலிமையாற் செ-யுங் கேடு ஒரு சிலரையே தாக்கும். ஆயின், அறிஞர் சூழ்ச்சிவலியாற் செ-யுங் கேடு பல பெருநாடுகளையுந் தாக்கிவிடும். உம்மை எதிர்மறை. "தாயைப் பழித்தாலுந் தண்ணீரைப் பழிக்கக் கூடாது" என்பது போன்றது இக் குறள். ஆதலால், இருசாராரையும் பகைத்துக் கொள்ளற்க என்பதே கருத்தாம். உழவே முதன் முதல் தோன்றிய மாந்தன் கைத்தொழிலாதலால், ஏனைத் தொழிலாளரையும் உழவராகவும் அவர் தொழிற்கருவியை ஏராகவும் உருவகித்தார். தோண்டு தற்பொருள் கொண்ட தொள் என்னும் வினையடிப் பிறந்து பயிர்த்தொழிலை முதலிற் குறித்த தொழில் என்னும் சொல், இன்று தொழிற் பொதுப்பெயராக வழங்கி வருவது கவனிக்கத்தக்கது.

"The pen is mightier than the sword" என்னும் ஆங்கிலப் பழமொழி இக் குறட் கருத்ததே. காளமேகம் திருமலைராயன் பட்டினத்தில் மண்மாரி பெ-வித்தது, நிறைமொழி மாந்தர் மறைமொழி போன்றதாம். ஆயின், அமைச்சர் தம் சூழ்ச்சியால் விளைவிக்கும் கேடு, வில்லேருழவரான மறவர் வாயிலாக நிகழ்த்துவதே என வேறுபாடறிக. ஆகவே, அத்தகைய அமைச்சரைத் துணைக்கொண்ட அரசர், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் கரிகால் வளவனும் சேரன் செங்குட்டுவனும் போன்றாராயின் இருமடி வலியராதலால், அவரொடு பகை எக்கரணியத்தை யிட்டுங் கொள்ளத் தக்கதன் றென்பது சொல்லாமலே பெறப்படும்.

873. ஏமுற் றவரினு மேழை தமியனா-ப் பல்லார் பகைகொள் பவன்.

(இ-ரை.) தமியனா-ப் பல்லார் பகை கொள்பவன் - தான் துணையின்றித் தனியனா யிருந்துகொண்டே பலரொடு பகைகொள்பவன்; ஏமுற்ற வரினும் ஏழை - பித்தம் பிடித்தவரினும் பேதையனாவன்.

தனிமை நட்பின்மை, அறிவின் திரிவால் இருவரும் ஒப்பாராயினும், பித்தன் பொதுவாக ஒருவரையும் பகையாமையானும் அதனால் அவனுக்குப் பிறராற் கேடின்மையானும், துணையோடு கூடிய வழியும் பகைவரை வெல்லுதல் உறுதியில்லாதிருக்க, அஃதில்லாதவன் ஒரே சமையத்திற் பலரொடு பொரின் தான் உடனே அழிதல் முழுவுறுதியென்பதை அறியாமையானும், பலர்பகை கொண்ட தனியனை 'ஏமுற் றவரினும் ஏழை' என்றார். இவ் விரு குறளாலும் பகைகொள்ளுதல் சிறப்பு வகையால் விலக்கப்பட்டது.