132
திருக்குறள்
தமிழ் மரபுரை
874. பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் றகைமைக்கட் டங்கிற் றுலகு.
(இ-ரை.) பகை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்பு உடையாளன் தகை மைக்கண் - இயலுமாயின் பகையையும் நட்பாக மாற்றிக்கொண்டு அமைதி யுடன் ஒழுகும் பண்பாடுள்ள அரசனது பெருமையின்கீழ்; உலகு தங்கிற்று - இவ் வுலகம் அடங்கி நிற்கும்.
பொருட்கேற்ப இயலுமாயின்' என்பது வருவிக்கப்பட்டது. 'வேண்டிய வழி' என்னுஞ் சொல்லை வருவித்தார் பரிமேலழகர். அது,
"பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்
டகநட் பொரீஇ விடல்"
(குறள்.830)
என்பதிற் கூறியவாறு கூடாநட்பொடு கூடிவாழும் வலக்கார நிலைமைக்கு ஏற்குமேயன்றி, பகையை நிலையான உண்மை நட்பாக மாற்றியொழுகும் பண்பாட்டு நிலைமைக்கு ஏற்காதென அறிக. பெருமை என்றது பொருள், படை, பண்பாடு முதலியவற்றால் ஏற்பட்ட தலைமை. பகையும் நட்பாக மாறியபின் உலக முழுதும் வயப்பட்டிருக்குமாதலின் 'தகைமைக்கட் டங்கிற் றுலகு என்றார். தேற்றமும் நிலைபேறும்பற்றித் 'தங்கிற்று' என இறந்த காலத்தாற் கூறினார்.
875.
தன்றுணை யின்றாற் பகையிரண்டாற் றானொருவ னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று.
(இ-ரை.) தன் துணை இன்று – தனக்குதவுந் துணையொன்று மில்லா மலும்; பகை இரண்டு - தன்னைக் கெடுக்கக் கூடிய பகை இரண்டுடை யனாகவும்; தான் ஒருவன் - தான் தனியனாகவும் இருப்பவன்; அவற்றின் ஒன்று இன்துணையாக் கொள்க - அப் பகை யிரண்டனுள் தனக்கிசைந்த தொன்றை அப்பொழுதைக்கேனும் நிலையாகவேனும் நல்ல துணையாக அமைத்துக் கொள்க.
தனக்கிசைந்து தன்னொடு சேரக்கூடியதும் இன்னொரு பகையை வெல்லுதற் கேற்றதுமாகும். உண்மையான துணையாகச் செ-து கொள்க வென்பார் 'இன்றுணையா' என்றார். 'ஆல்' இரண்டும் அசைநிலை. 'ஆக' என்னும் வினையெச்ச வீறு 'ஆ' எனக் கடைக்குறைந்து நின்றது. 'கொள்க வற்றின்' என்பதில் அகரந்தொக்கது. இவ் விரு குறளாலும் நட்பாக்கக் கூடிய பகை கூறப்பட்டது.