உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

திருக்குறள்

தமிழ் மரபுரை


'வாள்போல் பகைவரை யஞ்சற்க' என்றது, உட்பகைவர்க்கு அஞ்ச வேண்டிய அளவு வெளிப்பகைவர்க்கு அஞ்சவேண்டா வென்னுங் கருத்தினதேயன்றி அஞ்சவே வேண்டாவென்னுங் கருத்தினத்தன்று, வெளிப்பகை முன்னறிந்து தடுக்கவும் தற்காக்கவும் ஏதுவாயிருத்தலானும், உட்பகை அங்ஙனம் முன்னறியவும் தப்பிக்கொள்ளவும் இடமின்றி அழிவைத் தருதல் உறுதியாதலானும், முன்னதற்கு அஞ்சற்க' என்றும், பின்னதற்கு 'அஞ்சுக' என்றும் கூறினார். வெளிப்பகையினும் உட்பகை மிகக் கொடிது என்பது கருத்து. 'பகைவர்' இரண்டனுள் முன்னது ஆகுபொருளது. இக் குறளால் உட்பகையினின்று விலகுதல் கூறப்பட்டது.

883. உட்பகை அஞ்சித்தற் காக்க வுலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும்.

(இ-ரை.) உட்பகை அஞ்சித் தற்காக்க - உட்பகைவர்க்கு அஞ்சித் தன்னைக் காத்துக்கொள்க; உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும் ஏனெனில், அங்ஙனங் காவாவிடின், தனக்குத் தளர்ச்சி வந்தவிடத்து, அவர் பகை குயவன் மட்கலத்தை யறுக்குங் கருவி அதனை யறுப்பதினும் மிகுதியான அளவு தன்னைக் கெடுத்துவிடும்.

'காத்தல்' அவரொடும் சேர்ந்தாரொடும் எவ்வகைத் தொடர்புமின்றி யிருத்தல். மண்ணைப் பகுக்குங் கருவி 'மட்பகை'. அறியப்படாது உள் ளிருந்தே கெடுத்தலால் கேட்டினின் தப்ப முடியா தென்பதாம்.

‘மட்பகையின் மாணத் தெறும்' என்பதற்கு, "கரைபடக்கட்டிய மண் உறுதிக்கு ஒரு தளர்ச்சி வந்த இடத்து மற்று அதனை முழுவதும் முரித்து எறியும் வெள்ளம்போல், இதுவும் தன் குடி முழுதும் குலைத்து எறிந்துவிடும் என்றவாறு.... மண்பகை என்பது நீர் வெள்ளம் என்றது" என்பது காலிங்கர் உரை.

884. மனமாணா வுட்பகை தோன்றி னினமாணா வேதம் பலவுந் தரும்.

(இ-ரை.) மனம் மாணா உட்பகை தோன்றின் - புறத்தில் திருந்தியது போல் தோன்றி அகத்தில் திருந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமாயின்; இனம் மாணா ஏதம் பலவும் தரும் - அது அவனுக்குச் சுற்றம் துணையா காமைக் கேதுவாகிய பல குற்றத்தையும் உண்டுபண்ணும்.

'இன மாணா ஏதம்' சுற்றத்தாரை உள்ளாக நின்று வேறுபடுத்தலும் அவர் வேறுபடுதலும் அதனால் அவர் துணை இல்லாமற் போதலுமாம்.