தாழ்வுயர்வும் உணர்த்தி நின்றன. இம் முக்குறளாலும் அவையஞ்சாரது சிறப்புக் கூறப்பட்டது.
724. கற்றார்முற் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற
மிக்காருண் மிக்க கொளல்.
(இ-ரை.) கற்ற கற்றார்முன் செலச்சொல்லி - தாம் கற்றவற்றை அவை யல்லாத வேறு நூல்களை அல்லது தம்மினுங் குறைவாகக் கற்றோரவைக் கண், அவர் மனத்திற் பதியுமாறு எடுத்துச் சொல்லி; தாம் கற்ற மிக்க மிக்காருள் கொளல் - தாம் கற்றவற்றினும் மிகுந்தவற்றைத் தம்மினும் மிகுதியாகக் கற்றவரிடத்து அறிந்து கொள்க.
'மிக்காருள் மிக்க கொளல்' என்பதனால், 'கற்றார் முன்' என்பதற்குத் தம்மினுங் குறைவாகக் கற்றோரவைக்கண் என்று பொருள் கூறப்பட்டது. 'மிக்க' என்றது, ஒரு துறைப்பட்ட உயர்ந்த பொருள்களையும் பிறதுறைப்பட்ட வேறு பொருள்களையுமாம். பல்துறைக் கல்வியுடையார் ஒரே அவை யினராயும் வெவ்வேறு அவையினராயு மிருக்கலாம். வெவ்வேறு துறைக் கல்வி கற்றவர் ஒருவருக்கொருவர் இருதலைப் பரிமாற்றஞ் செ-துகொள் ளலாமென்பது, இக் குறட்கருத்து.
725. ஆற்றி னளவறிந்து கற்க வவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.
(இ-ரை.) அவை அஞ்சா மாற்றம் கொடுத்தல்பொருட்டு - வேற்றரசர் அவையிடத்து அவர் வினாவியதற்கு விடையும் சொன்னதற்கு மறுமொழியும் அஞ்சாது சொல்லுதற் பொருட்டு; ஆற்றின் அளவு அறிந்து கற்க முறைப்படி அளவை நூலைத் தெளியக் கற்க.
அமைச்சர்க்குத் தம் அரசரின் அவையிடத்துப் பொதுவாகவும் இயல்பாகவும் அச்சமிராதாகையாலும், பெரும்பாலும் தம் சூழ்வினைகளை அரசரோடேயே நிகழ்த்துவராதலாலும், இங்கு வேற்றரசர் அவையெனக் கூறப்பட்டது. முறைப்படி கற்றலாவது இலக்கண நூல் கற்ற பின்னரே அளவை நூலைக் கற்றல். அளவென்றது நான்குமுதற் பத்து வகையாகச் சொல்லப்பெறும் அளவை வகைகளை. அவை முன்னரே கூறப்பட்டன.
காட்சியுங் கருத்துமாகிய இருவகைப் பொருள்களின் இயல்பையும் அளந்தறிதற்குக் கருவியாகவுள்ள நெறிமுறைகளை, அளவையென்றது