50
திருக்குறள்
தமிழ் மரபுரை
வல்லவர் கூட்டமாதலால் வல்லவை எனப்பட்டது. அவையைக் குறிக் குஞ்சொல் இக் குறளில் வேறின்மையால், 'வல்லவை' என்பதற்குத் தாங் கற்றுவல்ல நூற்பொருள்களை என்று உரைப்பது பொருந்தாது. அச்சத் தினாலென்பது அதிகாரத்தால் வந்தது. 'சொல்லின் றொகை', 'தூ-மை' என்பவற்றிற்கு 711 ஆம் குறளில் உரைத்தவா றுரைக்க.
722. கற்றாருட் கற்றா ரெனப்படுவர் கற்றார்முற்
கற்ற செலச்சொல்லு வார்.
(இ-ரை.) கற்ற கற்றார்முன் செலச் சொல்லுவார் - தாம் கற்றவற்றைக் கற்றாரவைக்கண் அவர் உளங் கொள்ளும்வகை சொல்லவல்லவர்; கற்றாருள் கற்றார் எனப்படுவர் - கற்றா ரெல்லாருள்ளும் நன்கு கற்றவரென்று கற்றாரால் உயர்த்துச் சொல்லப்படுவர்.
"புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாகும் - நலமிக்க
பூம்புன லூர! பொதுமக்கட் காகாதே
(பழ. 7)
கற்றார் என்னும் சொல் பன்முறை வந்தது சொற்பொருட் பின்வருநிலை யணியாம்.
723. பகையகத்துச் சாவா ரெளிய ரரிய
ரவையகத் தஞ்சா தவர்.
(இ-ரை.) பகையகத்துச் சாவார் எளியர் - போர்க்களத்துள் அஞ்சாது புகுந்து பகைவரொடு பொருது மறத்தொடு சாகவல்லவர் உலகத்துப் பலர்; அவையகத்து அஞ்சாதவர் அரியர் - ஆயின், ஓர் அவையிடத்துப் புகுந்து அஞ்சாது நின்று உரை நிகழ்த்த வல்லவர் சிலரே.
இது பகையஞ்சார்க்கும் அவையஞ்சார்க்குமுள்ள தொகைவேற்றுமை கூறிற்று. அமர்க்கள மறத்தினும் அவைக்கள மறமே சிறந்ததென்பது கருத்து. ஒப்புமை கூறும் உவமையிற் போன்றே ஒவ்வாமை கூறும் வேற்றுமையிலும் உள்ள இரு கூறுகளுள், ஒன்றன் அடை இன்னொன்றைச் சாருமாதலின், அஞ்சாமை 'சாவார்' என்பதனொடு கூட்டப்பட்டது. பொருட்கேற்பப் பொருதல் சொல்லுதல் என்னும் இரு சாரார் வினைகளும் வருவித்துரைக்கப் பட்டன. எளிமையும் அருமையும் பெரும்பான்மை சிறுபான்மையொடு