உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

727. பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத்
தஞ்சு மவன்கற்ற நூல்.

(இ-ரை.) அவையகத்து அஞ்சும் அவன் கற்ற நூல் - அவைக்கு முன் நின்று அதற்கு அஞ்சி நடுங்குபவன் கற்ற நூல்; பகையகத்துப் பேடிகை ஒள்வாள் போர்க்களத்தில் நின்று போருக்கஞ்சும் கோழையன் பிடித்த கூர்வாளை யொக்கும்.

இயற்கைப் பேடியரும் செயற்கைப் பேடியரும் எனப் பேடியர் இரு வகையர். செயற்கைப் பேடியர் உவளகக் காவற்கும் பேடிமைக்கும் பேடி யராக்கப்பட்ட ஆடவராதலின், அவருள் மறவருமுளர் ஆதலால், பேடி என்பதற்குக் கோழையன் என்று பொருள் கூறப்பட்டது. அமர்க்கோழை வாளும் அவைக்கோழை நூலும் பயன்படாவென்பது கருத்து.

728. பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையு
ணன்கு செலச்சொல்லா தார்.

(இ-ரை.) நல் அவையுள் நன்கு செலச் சொல்லாதார் - தாம் கற்ற நல்ல பொருள்களை நல்லறிஞர் இருந்த அவைக்கண் தாம் கொண்ட அச்சத்தினால் அவர்க்கு விளங்குமாறு எடுத்துச் சொல்லும் ஆற்றலில்லாதார்; பல்லவை கற்றும் பயம் இலரே - பல நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே யாவர்.

கற்றோர் கல்வியைக் கற்றோரே அறிவராதலின், கற்றோர்முன் சொல்லாத கல்வி தமக்கேயன்றிப் பிறர்க்குப் பயன்படா தென்பதாம். உம்மை உயர்வுசிறப்பு. ஏகாரம் தேற்றம்.

729. கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்து
நல்லார ரவையஞ்சு வார்.

(இ-ரை.) கற்று அறிந்தும் நல்லார் அவை அஞ்சுவர் - நூல்களைக் கற்று அவற்றின் பயனை அறிந்திருந்தும், நல்ல அறிஞரவைக்கு அஞ்சி அங்கு அவற்றை எடுத்துக் கூறமாட்டாதார்; கல்லாதவரின் கடை என்ப - கல்லாதவரினும் கடைப்பட்டவர் என்பர் அறிஞர்.

கற்றோர் தம் கல்வியைப் பிறர்க்கு எடுத்துச் சொல்வதனாற் பொருள் வகையாலும் புகழ்வகையாலும் தாமும் பயன்பெறுவராதலின், அதைச் சொல்லாமையால் தாமும் பயன்பெறாது பிறரையும் பயன்பெறுவிக்காது தம்