86
திருக்குறள்
தமிழ் மரபுரை
தோற்றத்தை மேற்கொள்வேனாக என்பதும், என் உடைமை முழுவதையும் ஒருங்கே இழப்பேனாக என்பதும், துறவு பூண்டு காட்டில் வதிவேனாக என்பதும், என் உயிரை விட்டுவிடுவேனாக என்பதுமாகப் பலத்திறப்படுவதாம். அவற்றுள் இறுதியதே இக் குறளிற் குறிக்கப்பட்டதென அறிக. ஒரு மறவன் தன் குறிக்கோளை நிறைவேற்றாது தோல்வியுறினும், தன் வஞ்சினத்தை நிறைவேற்றிவிடின் அது அவன் தோல்வியை வெற்றியாக மாற்றி விடுமாதலால், அவனை எவருங் குறைகூறுதற்கு இடமில்லை யென்பதாம். சொல்லி யென்பது அவா-நிலையால் வந்தது.
780. புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்கா
டிரந்துகோட் டக்க துடைத்து.
(இ-ரை.) புரந்தார் கண் நீர் மல்கச் சாகிற்பின் - படைமறவர் நீண்ட காலமாகத் தமக்கும் தம் குடும்பத்திற்கும் வாழ்வளித்துக் காத்த அரசரின் கண்களில் நீர் பெருகுமாறு, போர்க்களத்திற் சாகப்பெறின்; சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து - அச் சாவு இரந்தாயினும் பெற்றுக்கொள்ளும் தகுதியுடையதாம்.
பொதுவகையான சாவாயின், உறவினரே அழுவர்; விண்ணகப் பேறுங் கிட்டாது. செஞ்சோற்றுக் கடன் கழிக்கும் போர்மறவர் சாவாயின், அரசன் கண்ணீர் வடிப்பதும், நாட்டிற்காக உயிர் துறந்தாரென்று நாட்டார் புகழ்வதும், விண்ணுலகத்தில் தேவரா-த் தோன்றி யின்புறுவதும், நடுகல் தோன்றி நினைவுச் சின்னமாக விளங்குவதும், அரத்தக் காணிக்கை என்னும் இறையிலிக் கொடை யேற்படுவதும், சிறந்த பெருமையும் பயனுமாதலின், இரந்தாயினுங் கொள்ளத்தக்க தென்றார். 'நீர்மல்க' என்பதில், இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. இனி, 'நீர்மல்கு' என்னும் கூட்டுச்சொல் ஒருசொற்றன்மைப்பட்ட தெனினுமாம். 'சாகிற்பின்' என்பது அதன் அருமை நோக்கி நின்றது. இரத்தலின் இழிவான தொன்றுமில்லை யெனினும், அதுவும் இச் சாவின் பெருமை நோக்கித் தக்கதென்பதாம். இந் நான்கு குறளாலும் படைமறவர் உயிரோம்பாமை கூறப்பட்டது.
உறுப்பியலில் படைப்பகுதி முற்றிற்று.
அதி.79 -நட்பு
அதாவது, படைபோல அரசனுக்கு வினையிடத்துதவும் நட்பரசர் துணையும் குடிகட்குத் துன்பக்காலத்தில் உதவும் நண்பர் உறவும்.