உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




160

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

இனி, தமிழொன்றே கல்விவாயிலாதல் வேண்டு மென்பார் உண்மையில் தமிழ்ப்பற்றாளரு மல்லர்; அறிவியல் கம்மியக் குறியீடுகளை யெல்லாம் மொழிபெயர்க்காது அப்படியே ஆள வேண்டுமென்பர் தமிழுக்கு உயிர்நாடி தூய்மையே. அதனையிழந்து விடின், தமிழ் தமிழாயிராது வேறொரு திரவிட மொழியாக மாறிவிடுமென்பதை அவர் அறியார். ஆதலால் ஆங்கிலங் கற்கும் ஆற்றலற்றவர்க்கும் உள்நாட்டிலேயே வாழ்பவர்க்கும் தமிழ் வாயிற் கல்வியும், அவ் வாற்றலுள்ளவர்க்கும் வெளிநாடு செல்பவர்க்கும் ஆங்கில வாயிற் கல்வியும் இருத்தல் வேண்டு மென்பதே பொருத்தமாம்.

இனி, ஆங்கிலங் கற்கும் ஆற்றல் பிராமணர்க்கேயுண்டு என்று மானங்கெட்டுப் பிதற்றுவாருமுண்டு. 'இந்து'ச் செய்தித் தாளில், அடிக்கடி ஆங்கிலரும் வியக்குமாறு அழகாகவும் ஆற்ற லொடும் ஆங்கிலத்திற் கட்டுரை வரைந்துவரும் ஜி.கே. இரெட்டியும் அவர் போன்றார் பலரும் பிராமணரல் லாதாராயிருத்தல் காண்க. தமிழகத்தில் இந் நூற்றாண்டில் தலைசிறந்த ஆங்கில நாவலரா யிருப்பவர் வயவர் (Sir A) ஆ. இராமசாமி முதலியாரே.

தந்தைக்கு ஆங்கிலம் கற்கும் ஆற்ற லில்லாவிடினும், மகனையாவது சிறிது பெறச் செய்தல் வேண்டும். அது தலை முறைதோறும் படிப்படியாய் வளரும்.

ஆங்கிலவாயிற் கல்வியை அறவே அகற்றிவிடின், இனி இராமசாமி முதலியார்களும் இலக்குமணசாமி முதலியார் களும், ஆர்.கே. சண்முகஞ் செட்டியார்களும், இரத்தினசாமிப் பிள்ளைகளும், அண்ணாதுரைகளும் தமிழ்நாட்டில் தோன் றுவது அரிதினும் அரிதாகும்.

இன்று தமிழ்வாயிற் கல்வியொன்றேயிருத்தல் வேண்டு மென்று ஆங்கிலத்தில் எழுதுவார் அனைவரும், ஆங்கில வாயிற் கல்வி கற்றவரே.

ஆங்கில அல்லது மேலை நூல்களைச் செவ்வையாய் மொழி பெயர்த்தாலுமே, நாம் ஆங்கிலர்க்கும் மேலையர்க்கும் சமமான அறிஞராக முடியாது. அவர் அறிவை விளைப்பவர்; நாம் கொள்பவர். அவர் மேன்மேலும் அறிவை வளர்த்துக் கொண்டிருப்பதால், நம் மொழிபெயர்ப்பு முடியுமுன் அவர் மிக முன்னேறிவிடுவர். நாம் மொழிபெயர்த்த நூல்கள் பழமைப் பட்டும் வலிமையற்றும் போம். "இருந்தவன் எழுமுன் நின்றவன்