உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வள்ளுவர் கூட்டுடைமை

51

இக்காலத்தில் பெரும்பாலும் போர் நிறுத்தப்பட்டும், நோய் தடுக்கப்பட்டும், பிள்ளைப்பேறுதோறும் பெண்டிர்க் கிருந்த உயிரச்சம் நீக்கப்பட்டும், இயற்கைச் சேதங்கள் இயன்றவரை குறைக்கப்பட்டும், துவக்கப்பள்ளியாசிரியர் தொழிலாளர் முதலிய தாழ்வருமானத்தாரின் வாழ்க்கைநிலை உயர்த்தப்பட்டும் இருத்தலால், ஆமை வேகத்தில் இயங்கி வந்த மக்கட்பெருக்கம் இன்று முயல் வேகத்தில் தாவியோடுகின்றது.

சென்ற (19ஆம்) நூற்றாண்டின் நடுவில் நூறு கோடியாக மதிக்கப்பட்ட உலக மக்கட்டொகை, இன்று முந்நூற்றெழுபது கோடிக்கு (37,100 இலக்கம்) மேற்பட்டுள்ளது; இந் நூற்றாண் டிறுதியில் அறுநூறு அல்லது எழுநூறு கோடியாகிவிடும் என்றும் முன்னறிவிக்கப்படுகின்றது.

1971-ல் எடுக்கப்பட்ட இந்தியக் குடிமதிப்பின்படி (census) இந்திய மக்கட்டொகை ஏறத்தாழ 55 கோடி (54,79,49,809). இன்று 60 கோடிக்கு மேற்பட்டுவிட்டது; இந் நூற்றாண் டிறுதியில் 100 கோடி என்னும் அஞ்சத்தக்க தொகைக்கு ஏறிவிடும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

அந்தந்த நாட்டு மக்கள் அந்தந்த நாட்டு விளைவையே சார்ந்து செழிப்பாக வாழ்வதாயின், இந்திய நிலம் 30 கோடியையும் ஞாலம் முழுதும் 300 கோடியையுந்தான் தாங்கும். இன்றே வேலையில்லாத் திண்டாட்டமும் வீடில்லாத் திண்டாட்டமும் உணவில்லாத் திண்டாட்டமும் ஒழுங்கில்லாத் திண்டாட்டமும் மக்களையும் அரசுகளையும் வாட்டி வருத்தும்போது, இந் நூற்றாண்டிறுதியில் உலக மக்கட்டொகை இருமடங்கின் மேலும் இந்திய மக்கட்டொகை மும்மடங்கின் மேலும் கூடிவிடின், நிலைமை எங்ஙனமிருக்கும் என்பதை நினைக்கவும் நெஞ்சம் நடுங்குகின்றது.

உணவுத்தட்டு

8. மக்கட் பெருக்கத் தீமைகள்

இந்திய மக்கட்கு உள்நாட்டு விளைவு போதாமையால் வெளிநாடுகளினின்று பல்வேறு கூலங்கள் இறக்குமதியா கின்றன. இதனால் தேயத்திற்குக் கடன் மிகுகின்றது. கூல விலையும் ஏறியுள்ளது.

ஒன்பான் தவசங்களும் ஒன்பான் பயறுகளுமாகிய பதினெண் கூலங்களுள், பல இன்று பயிரிடப்படுவதில்லை.