உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

மொழிநூல்

மொழிநூல் இயல்வரையறை

மொழிநூல் என்பது, ஒரு மொழியின் அல்லது மொழிக்குடும்பத்தின் தோற்றம், வளர்ச்சி, அமைப்பு, சிறப்பியல், இனமொழி அல்லது இனமொழிக் குடும்பம் முதலிய வரலாற்றுக் கூறுகளையெல்லாம் விளக்கிக் கூறும் அறி வியல். ஆகவே வரலாறு, வண்ணனை, ஒப்புநோக்கு ஆகிய மும்முறைகளையும் அது ஒருங்கே தழுவியதாகும்.

மொழி என்பது, ஒரு நாட்டினத்தார் அல்லது குக்குலத்தார் தம் கருத்து களையெல்லாம் வெளிப்படுத்தற்குப் பொதுவாகக் கையாளும் சொற் றொகுதி அல்லது ஒலித்தொகுதி.

( நாட்டினம் - Nation. குக்குலம் - Tribe).

ஒரு தனிப்பட்ட மொழிபற்றிய மொழிநூலும் ஒப்பியலைத் தழுவு மேனும், பல்வேறு மொழிக் குடும்பங்கள்பற்றிய மொழிநூலிலேயே அவ் வொப்பியல் விளங்கித் தோன்றுவதால், ஒரே மொழிபற்றியதை அம் மொழியின் பெயராலும், ஒரே மொழிக்குடும்பம்பற்றியதை அக் குடும்பத் தின் பெயராலும், பல்வேறு மொழிக்குடும்பம்பற்றியதை ஒப்பியலின் பேராலும் குறிப்பது வழக்கமாகும்.

எ-டு: தமிழ் மொழிநூல், தமிழிய மொழிநூல், ஒப்பியன் மொழி நூல்

(Comparative Philology)

தமிழும் திரவிடமும் சேர்ந்தது தமிழியம். தமிழல்லாத தமிழின மொழிகளே திரவிடம். தமிழ் ஆரியத் துணை வேண்டாத இயன்மொழி யென்றும், திரவிடம் அதை வேண்டும் திரிமொழியென்றும் வேறுபாடறிக.