உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

3. குறிஞ்சி (குஞ்சி)

பொ பாதுவாக ஐவர்க்குக் குறையாத பல பிள்ளைகள் வரிசையாகவோ வட்டமாகவோ கூட்டமாகவோ நின்று கொண்டு, அவருள் ஒருத்தி ஏனை ஒவ்வொருத்தியையும் வரிசைப் படி சுட்டி, 'ஒண்ணரி, டூவரி, டிக்கரி, ஆவன், சாவன், இங்கிலீஷ், மென், ஆவன்,சாவன், பிளௌன், போடிங், 'சிட்' என்று சொல்லுவாள். சிட் என்ற சொல்லப்பட்ட பிள்ளை நீங்கிவிட வேண்டும். பின்பு, மீண்டும் மீண்டும் பல தடவை இச் சொற்கள் சொல்லப்படும். ஒவ்வொரு தடவையும் சிட் என்று சொல்லப்பட்ட பிள்ளை நீங்கிவிட வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து செய்யின் இறுதியில் ஒரு பிள்ளை எஞ்சிநிற்கும். அவள் மற்றவரை ஓடித் தொடவேண்டும்.

ஆட்டந் தொடங்குமுன் காலால் ஒரு வட்டம் போடப்படும். தொடவேண்டியவள் பிறரெல்லாம் ஒடிப்போய் ஒளிந்து கொள்ளும்வரை, தன் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும். எல்லாரும் ஒளிந்துகொண்டபின் “வரலாமா?" என்று கேட்டு, அவர் “வரலாம்” என்று சொன்னபின், தொடவேண்டியவள் அங்குமிங்கும் ஓடிப்போய்ப் பலவிடங்களிலும் தேடிப்பார்ப்பாள். ஒளிந்திருந்தவர் ஒடிவந்து வட்டத்திற்குள் நின்றுவிடின், அவரைத் தொடல் கூடாது. வட்டம் நோக்கி ஓடிவரும்போது, ஆடை அவிழ்ந்துவிட்டாலும் கீழே விழுந்துவிட்டாலும், அன்றும் அவரைத் தொடல்கூடாது. சிலர், ஒளிந்திராமலே நீண்டநேரம் ஆட்டம்காட்டி வட்டத்திற்குள் வந்து நின்றுகொள்வர்.

வட்டத்திற்கு வெளியே தொடப்பட்டவள், அடுத்த முறை முன் சொன்னவாறு பிறரைத் தொடல்வேண்டும்.

வட்டத்திற்குப் பதிலாக ஓர் எல்லைப்பொருள் குறிக்கப்படு வதுமுண்டு. அவ் வெல்லைப் பொருளைத் தொட்டுவிட்டாலும், அதன்பின் தொடுதல் கூடாது.