உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழன் எப்படிக் கெட்டான்?

89

இனி, தமக்கு ஒரு வேலையோ அமைச்சர் பதவியோ கிடைக்க வில்லையென்று, தன்னலமேபற்றி எதிர்க்கட்சியில் சேர்ந்துகொண்டு சமூகத்தைக் காட்டிக்கொடுத்த நீதிக்கட்சித் தமிழரும் உளர்.

தமிழர்க்கு முற் காலத்தில் மேனாட்டாருக்குத் தெரியாத எத்துணையோ அரிய கலைகள் தெரிந்திருந்தன. அவற்றையெல்லாம் விளக்கைக் கொளுத்தி மரக்காலால் கவிழ்த்து வைப்பது போலப் பிறர்க்குச் சொல்லாமல் மறைத்து மறைத்து வைத்து, அவை அவருடன் அழிந்தன. மந்திரம், மருத்துவம், சித்து, மல்லம், பொன்னாக்கம் (இரசவாதம்), யோகம் முதலிய பல கலைகளிலும் நூல் களிலும் பல அரிய மறைபொருள்கள் (இரகசியங்கள்) இருந்து அறிவிக்கப் படாமலே மறைந்து போயின. இக்காலத்தில் நாயை மந்திரத்தால் வாயைக் கட்டுவது போலவே, முற்காலத்தில் அரிமா (சிங்கம்) புலி முதலிய கொடிய விலங்குகளையும் வாயைக் கட்டினர். இதையே, “கரடி வெம்புலி வாயையுங் கட்டலாம்” என்று குறித்தார் தாயுமான அடிகள்.

இக்காலத்தில் அறுப்புமுறையாற் குணமாக்கக் கூடிய பல கட்டிகளையும் நோய்களையும் முற்காலத்தில் மருந்தினாலேயே குணமாக்கினர். முற்கால மருத்துவர் நாடி பார்த்துமட்டுமன்று, நோயாளியின் முகத்தைப் பார்த்தவளவிலும், நோயையும் நோய்நிலையையுங் கூறத்தக்கவரா யிருந்தனர். நல்ல பாம்பின் நஞ்சைப் போக்கும் மை இன்று முள்ளது. சித்தர் தாழ்ந்த உலோகங் களை யெல்லாம் மாற்றுயர்ந்த பொன்னாக மாற்றக்கூடியவராயும், தம் உடம்பை எஃகினும் உறுதியாக இறுக்கிக்கொள்ளக் கூடியவராயும், யோகியரைப் போன்றே பன்னூறாண்டுகள் உடலோடிருக்கக் கூடியவராயும், கூடுவிட்டுக் கூடு பாய்தல், வான்வழிச் செல்லல், மறைந்தியங்கல், நிலத்தூடு காண்டல், நீர்மேல் நடத்தல், நெருப்பி லிருத்தல், மூச்சையடக்கல் முதலிய அரிய சித்திகளை யடைந்தவராயு மிருந்தனர்.

ஆயுத மில்லாமலே, ஒருவனைப் பிடித்து நிறுத்தவோ கொல்லவோ ஏதுவான, சில மருமப் பிடிகளும் தட்டுகளும் தெரிந்த சிலர் இன்றுமுளர் என்று சொல்லப்படுகின்றது.

படிமைக்கலை(Sculpture)யில், எந்தக் கல்லையும் மெழுகுபோல் இளக்கக்கூடிய ஒரு முறை, முற்காலத்தார்க்குத் தெரிந்திருந்ததாக, அக் கலை யறிஞர் சிலர் கூறுகின்றனர். தமிழ்நாட்டினின்றே படிமைக்கலை, கிரேக்க, ரோம நாடுகளுக்குச் சென்றிருக்கின்றது.

இராவணன் தலை வெட்டவெட்டத் தளிர்த்தது என்பதிலும், சூரபதுமன் வேண்டியபடி யெல்லாம் தன் உருவை மாற்றினான் என்பதிலும், குபேரனின் புட்பக வானூர்தியிலும், சச்சந்தனின் மயில்வானூர்தியிலும், ஒவ்வோர் உண்மையுள்ளதாக ஊகிக்கப்படுகின்றது. இவையெல்லாம் மறைத்து வைக்கப்பட்டு மறைந்து போயின. இக்காலத்திலும், கம்மியர் சில நுட்பவேலைப் பாடுகளையும், மருத்துவர் சில மருந்துகளையும், பிறர் பிறவற்றையும், தம் சொந்த மாணவர்க்கும் மக்களுக்குங்கூட மறைத்துவைக்கின்றனர்.