உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

தமிழர் திருமணம்

ஒரு மருத்துவர் தாம் இறக்கும்போதுதான், தமது மருத்துவ நுட்பங் களைத் தம் மாணவர்க்குச் சொல்லுவது வழக்கம். அதுவும் ஒன்றிரண்டு குறைத்தே சொல்லுவர். இங்ஙனம் ஒவ்வொரு குரு மாணவத் தலைமுறையிலும் சிறிது சிறிதாய்க் குறைந்துகொண்டே போனால் “கழுதை தேய்ந்து கட்டெறும் பாகி, கட்டெறும்பு சிற்றெறும்பாகி, சிற்றெறும்பு ஒன்றுமில்லாமற் போனதுபோல்" தான். ஒவ்வோர் அரிய கலையும் இங்ஙனமே குறைந்தும் மறைந்தும் போயிருக் கின்றது.

சிலர் தாம் புதைத்து வைத்த பணத்தைத் தம் மனைவி மக்கட்குக்கூடச் சொல்லாது இறந்துவிடுகின்றனர். இவ்வகைப் பொறாமையுள்ளவரையில் தமிழர் உருப்பட வழியில்லை. ஒரு கலையை அல்லது தொழிலை வெளிப்படுத்தினால் தான், அதை மேலும் மேலும் திருத்தவும் வளர்க்கவும் முடியும்; அதனால் ஒரு நாடும் உலகமும் முன்னேறும்.

கடவுள் உலகுக்கெல்லாம் தந்தை. உலகமுழுமைக்கும் பயன்படுவதற் கென்றே, அவர் ஒரு குலத்தானுக்கோ ஒரு நாட்டானுக்கோ அறிவை அளிக்கின்றார். அவன் அவ் வறிவைத் தனக்குள் மறைத்து வைப்பானாயின், அது அழிவதுடன் அரசியற் பணத்தை அல்லது பொதுவுடைமையைக் கவர்ந்த சேவகனின் குற்றமும் அவனைச் சாரும்.

4. குறிபார்த்தல்

பண்டைக்காலத்தில் உலக முழுவதும் குறிபார்த்தல் பெருவழக்கா யிருந்திருக்கின்றது. மேனாட்டார் நாகரிகமடைந்த பின் அவ் வழகத்தை விட்டு விட்டனர். தமிழரோ இன்னும் அதில் பெரு நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

வானக்குறி உலகக்குறி என குறி இருவகைப்படும். இவற்றை முறையே காலக்குறி, பொருட்குறி என்றுங் கூறலாம். வானக்குறி ஜோசியம் என்றும், உலகக்குறி சகுனம் என்றும் வழங்குகின்றன. நாள் (நட்சத்திரம்), கிழமை முதலியன வானக்குறியாம். பூனை குறுக்கிடல் வாணியன் எதிர்ப்படல் முதலியன உலகக்குறியாம். இவ் விருவகைக் குறிகளையும் பார்ப்பதால் நன்மையுமில்லை; பாராததாற் கேடுமில்லை. மேனாட்டார் இவற்றைப் பாரததினால் விதப்பாக ஒரு தீங்கும், கீழ்நாட்டார் பார்ப்பதினால் சிறப்பாக ஒரு நலமும் அடைவதில்லை.

குறி பார்ப்பதால் பல தீமைகள்தாம் உண்டாகின்றன. அவை வீண் செலவு, காலக்கேடு, மனக்கவலை, முயற்சி யழிவு முதலியன. இதனால்தான், “ சாத்திரம் பார்க்காத வீடு சமுத்திரம்” என்னும் பழமொழி எழுந்தது.

கலியாணம் செய்யுமுன், பெண் மாப்பிள்ளைக்குப் பொருத்தம் பார்ப்பதால், சண்டை சச்சரவோ பிணி மூப்புச் சாக்காடோ வராமலிருக்கப் போவதில்லை. இருபத்தைந்தாம் ஆண்டில் இறக்கும் விதியுள்ளவனுக்கு, இருபதாம் ஆண்டில் பொருத்தம் பார்த்து மணஞ்செய்துவிட்டால், அவனுக்குச் சாவு வராதிருக்குமா? மேனாட்டார் பொருத்தம் பாராமல் மணப்பதால், கேட்டையாமலிருப்பதோடு நம்மினுஞ் சிறப்பாய் வாழ்கின்றனர். பொருத்தம்

7