உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழ்மணம்

(3) கவர்வு மணம்

13

கவர்வு மணமாவது, ஒரு பெண்ணைப் பெற்றோரிசைவும் அவள் இசைவுமின்றி, வலிந்து பற்றுதல்.

அது, ஊருக்கு வெளியே தனித்து நிற்கும் ஓர் இளம்பெண்ணை, வேற்றூரான் ஒருவன் வலிந்து பற்றிக்கொண்டு போய், அவளை மனைவியாகக் கொள்வது போன்றது.

ஒரு மறக்குடிப் பெண்ணை மணக்க விரும்பிய வேந்தன், அக் குடியார் அதற்கிசையாவிடத்து, பெரும் படையொடு சென்று அவரோடு போர் புரிவதுண்டு. அம் மறவர் தம் குடியின் மானத்தைக் காத்தற்கு அஞ்சாது எதிர்ப்பர். இது மகட்பாற் காஞ்சி எனப்படும்.

"நிகர்த்துமேல் வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பா டஞ்சிய மகட்பா வானும்

(புறத்திணையியல், 24)

என்று தொல்காப்பியர் கூறியது இதுவே. இதனையே, மறம் என்னுங் கலம்பக வுறுப்பு, அரசன் பெண்கேட்டு விடுத்த திருமுகத்தைக் கொணர்ந்த தூதனை நோக்கி, மறவர் எச்சரித்தும் அச்சுறுத்தியும் விடுப்பதாகக் கூறும்.

ஒரு மணப்பெண்ணின் அழகைப் பழிக்கும்போது, “அவள் என்ன ஒரு பெரிய சிறையா?” என்று பெண்டிர் கூறும் வழக்கம், ஒரு காலத்திற் பேரழகுடைய பெண்கள் வலியோராலும் அரசாலும் சிறைபிடிக்கப்பட்டமையை உணர்த்தும்.

ஓர் அரசன், தன் பகையரசனை வென்று அல்லது கொன்று, அவனுடைய தேவியரைச் சிறைபிடித்து வந்து வேளம் என்னும் சிறைச்சாலையில் இட்டு அவமானப்படுத்துவது, கவர்வு மணத்தின் பாற்படாது.

2. குலமுறை பற்றியது

பண்டைமுறைத் தமிழ் மணங்கள், குலமுறைபற்றி அகமணம் (Endogamy), புறமணம் (Exogamy) என இருவகைப்படும்.

அகமணமாவது, ஒரு குலத்தார் தம் குலத்திற்குள்ளேயே மணத்தல்; புறமணமாவது ஒரு குலப் பிரிவார் தம் பிரிவிற்குள் மணவாது வேறொரு பிரிவில் மணத்தல்.

இன்றுள்ள குலங்களுள், கலப்புக் குலங்கள் தவிர ஏனைய வெல்லாம் அகமணத்தனவே. திணைமயக்கம் ஏற்படு முன் குறவர், ஆயர், வேட்டுவர், உழவர், நுளையர் (செம்படவர்) எனத் தமிழர் ஐந்திணை மக்களாய் வெவ்வேறு நிலத்தில் வாழ்ந்தபோது, அவர்க்குள் பெரும்பால் வழக்கமாய் நிகழ்ந்தது அகமணமே.

குலப்பிரிவுகள் நாடு, ஊர், குலம், கூட்டம், கிளை, வகுப்பு, இல்லம், கரை முதலியனவாகப் பல்வேறு திறப்படும்.

"நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும்

என்பது தொல்காப்பியம்.

(1060)