உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

தமிழர் திருமணம் பாலை, மருதம், நெய்தல் என்னும் ஐந்நிலங்கள். குறிஞ்சி மலையும் மலைசார்ந்த இடமும்; முல்லை மலையற்ற செடியுங்காடும் புல்வெளியும்; பாலை நீரும் நிழலுமின்றி வற்றி வறண்ட இடம்; மருதம் நீர்வளமும் நிலவளமும் ஒருங்கே யுள்ள வயல்நாடு; நெய்தல் கடலும் கடற்கரையும். இவ் ஐந்நிலங்கட்கும் பொதுவாகக் கொள்ளப்பட்டதினால், இருதலைக் காதல் அன்பின் ஐந்திணை யெனப்பட்டது.

பெருந்திணை பெரும்பகுதி மக்கள் மணமுறைகளும் பெரும்பாலன வற்றைத் தன்னுள் அடக்கி நிற்பதால், பொருந்தாக் காமம் பெருந்திணை யெனப் பட்டது. கவர்வு மணங்களும், இயற்கைக்கு மாறான எல்லாப் புணர்ச்சி வகைகளும், பெருந்திணையே. காதலொடு பொருந்தாமையும் நெறியொடு பொருந்தாமையும்பற்றி, பெருந்திணை பொருந்தாக் காமம் எனப்பட்டது.

கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் நிலமில்லாதபடி, ஐவகை நிலங்களையும் நடுநாயகமான அன்பின் ஐந்திணைக்கே உரிமையாக்கி விட்டதனால், மக்கட்கு நலம் பயவாத ஏனை யிருமண முறைகளும் இந் நிலவுலகத்தில்லாது நீங்கல் வேண்டும் என்பது, முன்னைத் தமிழிலக்கண நூலாரின் கருத்தாகும்.

மணமக்களின் இசைவைக் கேளாது பெற்றோரே முடித்து வைக்கும் திருமணங்களில், மணமகனுக்கு அல்லது மணமகளுக்கு மட்டும் காதல் இருப்பின், அது கைக்கிளை மணமாம்; இருவருக்கும் இருப்பின், அது அன்பின் ஐந்திணையாம்; ஒருவருக்கும் இல்லாவிடின், பெருந்திணையின் பாற்படுவதாம்.

மணமக்கள் இருவருள் ஒருவருக்கு மட்டும் காதல் இருக்கும்போது, ஏனையவரும் எதிர்ப்பின்றி இசைந்திருந்தால்தான், அது கைக்கிளை மணமாகும். அல்லாக்கால் அது பெருந்திணையே. ஒருதலைக் காமம் என்பது காதலின்றியும் இசைந்துவரும் பெண்ணை ஆடவனும் ஆடவனைப் பெண்ணும் மணப்பதே யன்றி, இசையாப் பெண்ணையும் ஆடவனையும் வலிதில் மணப்பதன்று.

ஒருதலைக் காமம் என்னும் முறையில் கைக்கிளையும், பெருந்திணையும் ஒக்குமேனும், முன்னது நெறிப்பட்டதென்றும், பின்னது நெறிதிறம்பியதென்றும், இவற்றின் வேறுபாடறிதல் வேண்டும்.

காமவுணர்ச்சியில்லாச் சிறுமியிடத்தும், காமவுணர்ச்சியிருந்தும் தன்மேற் காதல் கொள்ளாப் பருவப்பெண்ணிடத்தும், ஒருவன் காதல் மொழிகளைக் கூறி இன்புறுவது கைக்கிளைக் குறிப்பேயன்றிக் கைக்கிளை மணமாகாது.

இருதலையுங் காதலுள்ளவிடத்தும், முதியாளொடு கூடுதலும், கூட்ட இடையீடுபாட்டால் ஏற்படும் காமப் பித்தமும் கழிநெஞ்சழிவும், பெருந்திணை யென்று கூறப்பட்டிருப்பதால்; விண்ணின்பத்தை யொத்ததொரு பெண் ணின்பத்தை மண்ணுலகோர்க்கு வகுத்தனர் முன்னைத் தமிழ் இலக்கணியர் என்க.