உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழ்மணம்

19

சில சமயங்களில், மணமக்கள் குற்றங்குறைகளை மணமகன் வீட்டாரும், மணமகள் குற்றங்குறைகளை மணமகள் வீட்டாரும், மறைத்துவைப்பதுமுண்டு. திருமணம் இருவர்க்கு வாழ்வை யுண்டுபண்ணும் மங்கலநிகழ்ச்சி யாதலால், அங்ஙனம் மறைத்துவைப்போர் “ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணம் செய்து வை (ஒரு விளக்கேற்றி வை)” என்னும் பழமொழியைச் சொல்லித் தம்மைத் தேற்றிக்கொள்வர்.

(3) மணவிழா

i. முன்னிகழ்ச்சிகள்

மணவுறுதியான பின், மணத்திற்குரிய சித்திரை, ஆனி போன்ற நல்ல மாதத்தில், திங்கள், அறிவன் (புதன்) போன்ற நல்ல கிழமையில், 2ஆவது 7ஆவது போன்ற நல்ல பக்கத்தில் (திதியில்), புரவி (அசுபதி), சகடு (உரோகணி) போன்ற நல்ல நாளில் (நட்சத்திரத்தில்), நல்ல ஓரையில் (இலக்கினத்தில்) அமையும் மங்கல முழுத்தம் (முகூர்த்தம்) குறிக்கப் பெறும். அதன்பின், மணச்செய்தி காலமும் இடமுங் குறித்து, உற்றார் உறவினர் அனைவர்க்கும் பாக்கு வைத்துச் சொல்லப்பெறும்.

மணமனை, குலமரபுப்படி, மணமகன் வீடாகவோ மணமகள் வீடாகவோ இருக்கும். பொதுவாய், மணமகன் வீட்டில் மணம் நடைபெறும்.

மணமனையில், மணநாளுக்கு முன் 3, 5, 7, 9 ஆகிய ஒற்றித்த நாள்களுள் ஒன்றில், நல்வேளையில் முழுத்தக்கால் நாட்டிப் பந்தல் அல்லது கொட்டகை போடப்பெறும். பந்தல் அலங்கரிப்பு அவரவர் செல்வ நிலையைப் பொறுத்தது. பந்தலில் வாழை கமுகு கூந்தற்பனைமடல் முதலியன கட்டப்பெறுவதுண்டு. எத்துணை யெளியராயினும் வாழைமரம் தப்பாது கட்டப்பெறும். அது மணமக்கள் மரபு குஞ்சுங் குளுவானுமாய் வழிவழி வாழவேண்டும் என்னுங் குறிப்பையுடையதாகக் கருதப்பெறுவது.

பந்தல் நடுவில் அல்லது அதன் ஒரு கோடியில் மணவறை அமைக்கப் படும். அதன் காலொன்றில் அரசங்கொம்பு கட்டப்பெறும். அதை அரசாணிக் கால் என்பர். பண்டைக்காலத்தில் அரசன் தெய்வமாகக் கருதப்பட்டதினாலும், 'மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்' என்பதினாலும், அரசனைக் குறித்தற்கு அரசங்கொம்பை மணவறையில் நட்டி, அதை அரச ஆணிக்கால் என்று அழைத்ததாகத் தெரிகின்றது. மணவறையை அரசாணி மேடை என்பதுமுண்டு.

மணவறையில் பூ, மஞ்சள், குங்குமம், சந்தனம், அரிசி, அறுகு, வெற்றிலைபாக்கு, தேங்காய், முளைப்பாலிகை, விளக்கு, நிறைகும்பம், கோலப்பானை முதலிய மங்கலப் பொருள்கள் வைக்கப்பெறும். கோலப் பானையை ஆயிரங்கண்ணுப் பானையென்றும், அரசாணிப் பானையென்றும் ஆயிரத்தாழியென்றுஞ் சொல்வதுண்டு. மணமக்கள் குறைவின்றி மங்கலமாய் நீடூழி வாழவேண்டுமென்பதே, மணவறையில் மங்கலப் பொருள்களை வைப்பதின் கருத்து. விளக்குத் தெய்வச் சின்னம்.