உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இடைக்கால மாறுதல்கள்

(4) கற்பிழுக்கக் கூற்று

27

பிராமணப் புரோகிதன், மணமகனை நோக்கி, "நீ முதல் நாள் திங்க ளுக்கும் (சோமனுக்கும்), இரண்டாம் நாள் யாழோருக்கும் (கந்தருவருக்கும்), மூன்றாம் நாள் தீக்கும் (அக்கினிக்கும்) உன் மனைவியை அளித்துவிட்டு நாலாம் நாள் அவளை நுகர்வாயாக" என்று கூறும் கரணவுரைப் பகுதி,

"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை

99

(குறள். 55)

என்று கொள்ளும் தமிழன் கற்புணர்ச்சிக்கு மிகமிக இழுக்குத்தருவ தொன்றாம். அதிலும் “திங்கள் நுகர்ந்துவிட்டு யாழோர்க்குத் தர, யாழோர் நுகர்ந்துவிட்டுத் தீக்குத் தர, தீ நுகர்த்துவிட்டு உனக்குத் தர, நீ அவளைப் பெற்று நுகர்வாயாக என்று மணமகள்மேற் பிறர்க்கு முன்னுரிமையும் மணமகனுக்குப் பின்னுரிமையுந் தோன்றக் கூறுவது, எவ்வகையினும் ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று.

வித்துவசன கோலாகலன் என்னும் ஆக்கியாழ்வானுக்கும் ஆளவந்தார்க் கும் குலோத்துங்கச்சோழன் (?) அவைக்களத்தில் நிகழ்ந்த தருக்கத்தில், ஆளவந்தார் மேற்கூறிய கற்பிழுக்கக் கூற்றைச் சான்று காட்டி, சோழன் தேவி கற்பிழந்தவள் என்று நாட்டியபோது, அரசனும் அரசியும் உட்பட அவையோர் அனைவரும் பாராட்டியது, தமிழனுக்கு அழியாப் பழியைத் தருவதாம். (5) வீண் சடங்குகள்

தீ வலஞ்செய்தல், அம்மி மிதித்தல், அருந்ததி காட்டல் முதலிய பல சடங்குகள் வீணானவையாகும்.

அம்மி மிதித்தல், அகலிகை சாவக்கதையை நினைப்பித்து மணமகளை எச்சரிக்கும் சடங்காகச் சொல்லப்படுகின்றது. அம்மியைத் திருமகள் தங்கும் பொருள்களுள் ஒன்றாகக் கொள்வதினால், அதை மிதிக்கும் வழக்கம் இயல்பாகத் தமிழர்க்கில்லை. அது கட்டுக்கழுத்தியின் அடையாளமென்று தமிழப் பெண்டிர் கூறுகின்றனர். அம்மியும் குழவியும் தாயையுஞ் சேயையுங் குறித்து மணமகள் மகப்பேற்றை முன்னோக்குவன வென்றும், சிலர் கூறுவ துண்டு. எங்ஙனமிருப்பினும், சமையற்கின்றியமையாத அம்மி உணவுத் தட்டற்ற நல்வாழ்வைக் குறிப்பதென்று கொள்வது குற்றமாகாது. ஏதோவொரு நற்குறிப்பினதாக மணவறையிற் கொண்டுவந்து வைக்கப்பெறும் அம்மிக்கும், அழகிய கோலமிடப்பெறும் ஆயிரங்கண்ணுப் பானைக்கும், பொருத்தமாக ஓர் ஆரியத்தொடர்புகதை கட்டப்பட்டதாகத் தெரிகின்றது. அகலிகை சாவத்தைக் குறிப்பதற்குப் பொதுவகையான கல் போதுமே! அவள் கல்லாகச் சாவிக்கப் பட்டாள் என்றல்லாது, அம்மியாகச் சாவிக்கப்பட்டாள் என்று கதை கூறவில்லையே! மேலும், கொங்குவேளாளர் திருமணத்தில் மணமனைக்கு வெளியே அம்மி நிறுத்தப்பட்டு, நாட்டுக்கல் எனப் பெயர்பெற்றுப் பூசையுடன் வணங்கப்பெறுகின்றது.