உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

தமிழர் திருமணம்

வந்த பிராமணன், ஊர்ப்பார்ப்பான் எனப்பட்டான். பிராமணன் குடியிராத ஊர்ச் சடங்குகளை, அடுத்தவூர்ப் பார்ப்பான் வந்து செய்வது வழக்கம்.

ஆரியக் கரணத்தால் விளைந்த தீமைகள்

(1) தமிழுக்கும் தமிழனுக்கும் தாழ்வு

வடமொழி வழிபாட்டு மொழியும் சடங்கு மொழியுமாய் வழக்கூன் றியபின், தமிழ் அவற்றிற்குத் தகாததென்று தள்ளப்பட்டுத் தன் பழந் தலைமையை இழந்ததுடன், தாழ்வும் அடைந்தது. வடசொற்களைச் சொன்னால் உயர்வும் தென்சொற்களைச் சொன்னால் தாழ்வும் உண்டாகுமென்ற தவறான கருத்து, தமிழ்மக்கள் உள்ளத்திற் புகுந்ததினால், வடசொற்கள் ஒவ்வொன்றாய் வழக்கிற் புகுந்து, ஆயிரக்கணக்கான தூய தமிழ்ச்சொற்களை வழக்கு வீழ்த்திவிட்டன.

தமிழுக்கு நேர்ந்த தாழ்வு தமிழனுக்கும் நேர்ந்தது. அதனால், பிராமணன் தொட்டதை எல்லாத் தமிழரும் உண்ணலாமென்றும், எத்துணை உயர்ந்த தமிழனாயினும், அவன் தொட்டதைப் பிராமணன் உண்ணக் கூடாதென்றும் கூட்டரவு (சமுதாய) ஏற்பாடுகள் எழுந்தன. இது தமிழன் பொருளியல் வாழ்வை மிகமிகத் தாக்கிற்று.

சில தூய தமிழ்க்குலத்தார், தமிழன் உயர்வையும் வரலாற்றையும் அறியாது, தம்மைச் சத்திரியரென்றும் வைசியரென்றும் சொல்லித் தமக்கு ஆரியத் தொடர்பு கோரவும், சில உயர் வேளாளர் தம்மைச் சற்சூத்திரர் என்றழைத்து, தம்மை உயர்த்துவதுபோற் கருதிக்கொண்டு உண்மையில் தாழ்த்தவும், நிலைமை ஏற்பட்டுவிட்டது.

தமிழருள் உயர்ந்தவராகக் கருதப்பெறும் நெல்லை மரவூண் (சைவ) வேளாளரும் பிராமணருக்குக் கீழ்ப்பட்டுவிட்டதனால், தமிழரெல்லாரும் தாழ்த்தப்பட்டுவிட்டனர். இன்று தாழ்த்தப்பட்டவர் எனப்படுவார் உண்மையில் ஒடுக்கப்பட்டவரே.

(2) தமிழப் பார்ப்பாருக்குப் பிழைப்பின்மை

பிராமணப் புரோகிதர், உயர்ந்தோரின் அல்லது உயர்த்தப்பட்டோரின், எல்லா மதவியற் சடங்குளையும் ஆற்றும் தகுதியை முற்றூட்டாகப் பெற்றுவிட்டதினால், தமிழப்பார்ப்பார் பலர்க்குப் பிழைப்பில்லாது போயிற்று. (3) சிறுதெய்வ வழிபாடு

தமிழருள் உயர்ந்தோர், சிறுதெய்வ வணக்க நிலையும் பெருந்தெய்வ வணக்க நிலையும் கடந்து, முழுமுதற்கடவுள் வணக்க நிலையை அடைந்தவர். அங்ஙனமிருப்பவும், இன்று ஆரியக் கரணத்தால் கதிரவன், திங்கள், வருணன், தீ முதலிய இயற்கைப் பொருள்களையும் கோள்களையும் பூதங்களையும், வணங்கும், முந்தியல் நிலைமைக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டனர்.