உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




II. இடைக்கால மாறுதல்கள்

பிராமணர் பெருந்தொகையினராய்த் தமிழகம் வந்து சேர்ந்த பின், தமிழர் திருமணங்களிற் பல மாறுதல்கள் ஏற்பட்டன.

1. பிராமணப் புரோகிதமும் வடமொழிக் கரணமும்

பிராமணர் தேவர்வழி வந்த நிலத்தேவர் (பூசுரர்) என்றும்; அவர் முன்னோர் மொழியாகிய வேதமொழியும் அதனொடு வேதகால இந்திய வட்டாரமொழிகளாகிய பிராகிருதங் கலந்த இலக்கிய மொழியாகிய சமற் கிருதமும், தேவமொழியென்றும்; இரு பெருந்தவறான கருத்துகள் கடைச்சங்க காலத்திலேயே அரசர் உள்ளத்தில் ஆழ வேரூன்றிவிட்டதனால், பிற்காலத்தில் பிராமணப் புரோகிதம் தமிழகத்தில் விரைந்து பரவுவதற்கு மிகுந்த வசதியாயிருந்தது.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், சேரன் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் போன்ற தமிழ் வேந்தரும் பிற சிற்றரசரும், பிராமணரை நிலத்தேவரினும் மேலாகத் தேவரென்றேகொண்டு, அவர் சொன்னதை யெல்லாம் நம்பி அவர் ஏவியதையெல்லாம் இயற்றி, வடமொழி மந்திரம் வரையிறந்த வலிமையுள்ளதென்றும், இறைவன் செவிக்கு எல்லையற்ற ன்பந்தருவதென்றும், ஆரிய வேள்விகளெல்லாம் தப்பாது ஒருவனை உயர்கதிக்குச் செலுத்தும் என்றும், தெய்வத்தன்மையுள்ள வடமொழி மந்திரத்தைத் தெய்வத்தன்மையுள்ள பிராமணனே ஓதவல்லானென்றும், பிறர் அதை ஓதினால் அதன் ஆற்றல் கெடுமென்றும், தமிழருள் உயர்ந்தோர்மட்டும் அதைக் காதாற் கேட்கவும் அதனாற் பயன்பெறவுந் தக்கவர் என்றும், தமிழ்மக்கள் நம்புமாறு செய்துவிட்டனர். ‘மன்னன் எப்படி மன்னுயிர் அப்படி அன்றோ!

பிராமணர் முதலாவது சிறு தொகையினராயிருந்ததினால், அரச ரிடத்துமட்டும் ஆரியக்கரணமும் சடங்கும் ஆற்றிவந்தனர். பின்பு சற்றுத் தொகைமிக்கபின், பெருஞ்செல்வரான பெரு வணிகர்க்கும் ஆற்றிவந்தனர். அதன் பின், தொகை மிகமிகச் சிறுவணிகர்க்கும் உயர் வேளாளர்க்கும் ஆற்றத் தலைப்பட்டனர். அதனால், பெரும்பாலும் ஒவ்வொரு பேரூரிலும் ஒரு பிராமணன் குடியமர அல்லது அமர்த்தப்பட நேர்ந்தது. ஓர் ஊர்க்கு பொதுவாயிருந்து அவ் வூரிலுள்ள உயர்ந்தோர் சடங்குகளையெல்லாம் ஆற்றி