உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இடைக்கால மாறுதல்கள்

3. பொருந்தா மணமும் வீண்சடங்கும்

29

குலவெறி மெல்ல மெல்லச் சுற்றவெறியை உண்டுபண்ணிற்று. ஒரு முறைகாரப் பெண்ணுக்கு அல்லது ஆணுக்கு, எங்கே வேறிடத்தில் மணம் முடிந்துவிடுகின்றதோ என்னும் அச்சத்தினால், பிள்ளைப் பருவத்திலேயே அவர்க்கு மணம் செய்து வைப்பது வழக்கமாய்விட்டது. சிலர் தொட்டிற் குழந்தைக்கும் மணஞ் செய்து வைத்ததுண்டு. அது தொட்டில் மணம் என்னப்பட்டது. ஒருத்தி கன்னியாய் இறந்தால் தீக்கதியடைவாள் என்னும் ஆரியக்கொள்கையும், இளமை மணத்திற்குக் காரணமாயிற்று.

ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு' ஆதலால், மணஞ்செய்து வைக்கப்பட்ட பிள்ளை மணமகன், மணமகள் பூப்படையுமுன் இறந்துவிடுவதுமுண்டு. அவனால் மணக்கப்பட்ட சிறுமி உண்மையில் அவனை மணந்திராவிட்டாலும், மணந்ததுபோன்றே கருதப்பட்டுக் கைம்பெண்ணாய்விடுவாள். கைம்பெண் மணஞ்செய்யுங் குலமாயின், அவட்கு மணவாழ்க்கையுண்டு. அதிலும் புதுப் பெண்மையை இழந்தேயிருப்பாள். கைம்பெண் மணஞ்செய்யாக் குலமாயின், அவட்கு மணவாழ்க்கை இல்லவேயில்லை. காலமெல்லாம் அமங்கலியாக, பூப்படைந்தபின் காமவுணர்ச்சி யடக்கும் கரையற்ற துன்பத்திற்கோ கருதப்பட்டு, ஒழுக்கக்கேட்டிற்கோ உரியவளாவாள். பிற பெண்டிர்போல் ஒரு கணவனொடு கூடி வாழவும், பூச்சூடவும், மங்கல வினைகளிற் கலந்துகொள்ளவும், வெளிப்படையாய்ப் பிள்ளை பெறவும், இன்பநுகரவும், உரிமையற்றவளாய், தன் வாழ்நாள் முழுவதும் உலக வாழ்க்கையை ஒரு சிறைவாழ்க்கையும் அளற்று (நரக) வாழ்க்கையுமாகவே கழித்து, சொல்லொணாத துன்புறுவாள்.

பிள்ளை மணமகன் தன் சிறு மனைவி பூப்படைந்து தன்னொடு கூடிவாழும்வரை இறவாதிருப்பினும், நீடித்துவாழும் நிலைமையில்லாக்கால், மேற்கூறிய துன்பங்களே நேரும். பூப்படைந்தபின்னரே மகளிர்க்கு மணஞ் செய்துவைப்பின், இத்தகைய துன்பங்களினின்று பெரும்பாலும் தப்பியுய்வர்.

பிள்ளைப் பருவத்தில் மணஞ்செய்து வைப்பதால், மனைவி பூப்படைந்த வுடன் கணவனொடு கூடிவாழ நேரும். உடல் முழு வளர்ச்சியடையுமுன் கருக்கொள்ளும் மகளிர், தலைமகப் பேற்றில் இறந்துவிடுவதுமுண்டு. அங்ஙனம் இறவாதிருப்பினும், பிறக்கும் பிள்ளை உரனுள்ளதாயும் நீடு வாழியாயும் இருப்பதில்லை; தாயுடலும் தளர்ந்துவிடுவதுண்டு;

பூப்படையுமுன் மணஞ்செய்து வைத்தாலும் பூப்படைந்தவுடன் மணஞ்செய்து வைத்தாலும், மகளிரின் இளமையைப் பொறுத்த வரையில், இரண்டும் ஒன்றே. பூப்படைந்தவுடன் எல்லா மகளிர்க்கும் காமவுணர்ச்சி ஏற்பட்டுவிடுவதில்லை. இதனால், மணம் நிகழ்ந்த பின்பும் கூட்டநாள் தள்ளிவைக்கப்படுகின்றது. இது சேர்வு மணம் (சாந்தி கலியாணம்) அல்லது சேர்வு முழுத்தம் (சாந்தி முகூர்த்தம்) என்னும் வீண் சடங்கிற்குக் காரணமாயிற்று.