உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

தமிழர் திருமணம் காமக் குறிப்பும் சேர்க்கைத் துணிவும் இல்லாத இளம்பருவ ஆணிற்கும் பெண்ணிற்கும் மணஞ்செய்து வைப்பதினாலேயே, அவற்றை அவர்க்கு ஊட்டும்பொருட்டு, நலங்கிடல், உணவூட்டல், வெற்றிலை மடித்துக் கொடுத்தல், அப்பளந்தட்டல், ஒற்றையா இரட்டையா பிடித்தல், பூச்செண்டெறிதல், எழுத்தாணியெடுத்தல், ஒளிந்து விளையாடல், மோதிரம் எடுத்தல், பிள்ளையார் அல்லது பொம்மை கொடுத்தல், ஊஞ்சலாடல், கோபித்துக்கொண்டு போன மணமகனை அழைத்துவரல், மஞ்சள் நீராடல் முதலிய பல வீணான சடங்குகள் ஏற்பட்டன. மணவாழ்க்கைக்கேற்ற வளர்ச்சியடைந்த பருவத்தில் மக்கட்கு மணஞ்செய்து வைத்தால், அவர் பிறர் துணையின்றித் தாமாகவே கூடி வாழ்வர்.

சில தமிழக்குலத்தார் மணவறையில் திரைகட்டித் தாலி கட்டுவது, மகமதியர் இந் நாட்டிற்கு வந்தபின் ஏற்பட்ட பயனற்ற செயலாகும்.

இனி, வளர்ச்சியடைந்த மக்கட்கு மணஞ்செய்து வைத்தவிடத்தும், அவர் விருப்பத்தைக் கேளாது பெற்றோர் தம் விருப்பப்படியே இசையாத இளைஞனையும் இளைஞையையும் இணைத்து வைத்து, பின்பு அவர் துன்புறும்போது 'தாரமுங் குருவுந் தலைவிதி' என்றும், 'கழுத்தில் விழுந்த மாலை கழற்ற முடியாது' என்றும், 'அடுப்பில் வைத்த கொள்ளி எறிந்துதான் தீரவேண்டும்' என்றும், கூறுவது அவர் மடமையைக் கோடிட்டுக் காட்டுவதே யாகும்.

இனி மணமக்களின் ஒத்த வளர்ச்சியை ஒருசிறிதும் கவனியாது, ஒரு சிறுவனுக்கு ஒரு பெரும் பெண்ணை மணஞ்செய்து வைத்து மாமனே அவளுக்குக் கணவனாவதும், ஒரு முழு வளர்ச்சியடைந்த முரடனைக் கண்டு அஞ்சிச் சாகுமாறு, அவனுக்கு ஒரு மங்கைப் பருவத்து மெல்லியளை மணம் புணர்ப்பதும், இடைக்காலத்து நிகழ்ந்துவந்த கொடுஞ் செயல்களாம்.

பழஞ்சேர நாடாகிய மலையாள நாட்டில், பூப்பின்முன் ‘தாலிகட்டு’ என்னும் பொய் மணமும், பூப்பின்பின் ‘சம்பந்தம்' என்னும் மெய்ம்மணமும், ஆக இருமணம் ஒவ்வொரு பெண்ணிற்கும் சில குலத்தில் நேர்ந்ததற்குக் காரணம் ஆரியமே.