உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




III. திருமணச் சீர்திருத்தம்

1. சீர்திருத்த இயக்கம்

இடைக்காலத்தில் தமிழ் மரபிற்கொவ்வாத பல ஆரிய முறைகளும் சடங்குகளும் தமிழ் மணங்களிற் கலந்துவிட்டதனாலும், அவற்றால் தமிழுக்கும் பல தீமைகள் விளைந்ததினாலும், அவற்றைக் களைந்து தமிழ் மணத்தைத் திருத்தற்குப் பல சீர்திருத்தத் தலைவர் தோன்றினர். அவருள் நாயகமானவர் நால்வர். அவராவார் :

(1) சித்தூர் மார்க்கசகாய ஆச்சாரியார்

இவர் சென்ற நூற்றாண்டில் சித்தூர் மாவட்டத்தில் தோன்றியவர்; பொற்கொல்லர் வகுப்பினர்; வடமொழி வேத இதிகாச புராணங்களை நன்றாய்க் கற்றவர். இவர், கம்மாளர் விசுவப்பிராமணர் என்றும், வடமொழி வேதப்படி விசுவப்பிராமணரே திருமணம் நடத்திவைக்கவேண்டுமென்றும், பிராமணர் மக்களை ஏமாற்றித் தொன்றுதொட்டு நடந்துவந்த முறையினை இடையில் மாற்றிவிட்டனரென்றும், போராடி, ஒரு திருமணத்தை வடமொழியில் நடத்தி வைக்கத் தொடங்கியபோது, பஞ்சாங்கம் குண்டையர் என்னும் பிராமணப் புரோகிதர் வந்து தடுத்தார். மார்க்கசகாய ஆச்சாரியார் அவருக்கு இணங்காத தினால் கலகம் உண்டாயிற்று. அதன் விளைவாய் ஒரு நடுவர் குழுக் கூடிற்று. அதன் முன்னிலையில், பஞ்சாங்கம் குண்டையர் வினவிய வினாக்கட்கெல்லாம் மார்க்கசகாய ஆச்சாரியார் உடனுடன் தக்க விடை விடுத்துவிட்டதனால், ஆச்சாரியார் பக்கம் முடிவு செய்யப்பட்டது. அதன்பின்னும் பஞ்சாங்கம் குண்டையர் விடாமல், முறையே, கீழ் முறையாளர் (Sub Magistrate) மன்றத்திலும், மாவட்ட மன்றத்திலும், வழக்குத் தொடுத்தார். அங்கும் வினவிய வற்றிற்கெல்லாம் தக்கவாறு விடுத்துவிட்டதனால், ஆச்சாரியார் பக்கமே தீர்ப்பாயிற்று. இப் போராட்டமும் வெற்றியும், 'சித்தூர் அதாலத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு' என்னும் தலைப்பில் புத்தக வடிவாய் வெளியிடப்பட்டுள.

(2) மறைமலையடிகள்

இவர் தனித்தமிழ் இயக்கத் தலைவராதலால், ஆரிய மொழியை அறவே அகற்றி, திருமணக் கரணமொழி முழுவதையும் தூய தமிழில் அமைத்துக் கொண்டார். வேள்வி வளர்த்தலும் தீவலம் வருதலும் மணவறையில் மங்கலப் பொருள் வைத்தலும், இவரால் விலக்கப்படவில்லை.