உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திருமணச் சீர்திருத்தம்

41

ஒரே நாளிலும் ஒரே வேளையிலும் பிறப்பவரெல்லாரும் ஒரே நிலைமை யடைவதின்மையால், தன் முயற்சியையும் இறைவனருளையும் பிறர் துணையையுமே நம்பி வாழ்தல்வேண்டும். இதனால் கணியர் பிழைப்புக் கெடாதவாறு, அவரை உடுநிலையங்களிலும் (Observatory) வானாராய்ச்சி நிலையங்களிலும் அமர்த்திக்கொள்வது, அரசியலார்க்குத் தகும்.

(7) மணம்பற்றிய செய்திகளைத் திட்டமாய் முடிவு செய்துகொள்ளுதல்

பரிசம், நகை, செலவு, நடைமுறை முதலியனபற்றி, மணமகன் வீட்டாரும் மணமகள் வீட்டாரும் முன்னமே பேசித் திட்டமான முடிவு செய்து கொள்ளல்வேண்டும். அல்லாக்கால், கரணவேளையிலோ, மணவிருந்திலோ கலாம் விளைந்து, திருமணம் நின்றுவிடவோ இன்பங்கெடவோ நேர்ந்து விடுகின்றது. ‘பந்தல் நட்டினாற் பகை' என்பது பழமொழி.

(8) தாய்மொழியிற் கரணம் செய்வித்தல்

தேவமொழியென ஒன்றின்மையாலும், தமிழ் வடமொழிக்கு முந்தியதும் ஆரிய மொழிகட்கு மூலமும் ஆனதினாலும், ஆரியக் கரணம் தமிழனுக்கு மானக்கேட்டை விளைப்பதனாலும், பிராமணர் தென்னாடு வருமுன் எல்லாத் தமிழர் மணங்களும் தமிழிலேயே நடைபெற்று வந்ததினாலும் ஒவ்வொரு தமிழனும் தமிழிலேயே கரணம் செய்வித்தல்வேண்டும். பிராமணன் தமிழன்பனாகித் தமிழிற் கரணம் செய்ய இசையின் அதை ஏற்றுக்கொள்ளலாம். தமிழிற் கரணம் செய்வியாதவன் தமிழனாகான்.

ஒவ்வொரு தூய தமிழனும், தன் வீட்டுக் கரணத்தை மட்டுமன்றிப் பிறர்வீட்டுக் கரணத்தையும் தமிழிற் செய்விக்க முயற்சி செய்தல் வேண்டும். வடமொழியில் நடக்கும் கரணத்திற்குச் செல்லுதல் கூடாது.

(9) வீண்சடங்கு விலக்கல்

முற்கூறிய வீண் சடங்குகளோடு, முன்னோர் காலத்தில் நிகழ்ந்த உடன்போக்கு, மகட்பாற்காஞ்சிப் போர், மணப்போட்டிப் போர் முதலியவற்றைக் குறிக்கும் நினைவுகூர் சடங்குகளையும் விலக்கல் வேண்டும்.

(10) செல்வநிலைக் கேற்பச் செலவு செய்தல்

திருமணத்தில் தாராளமாய்ச் செலவு செய்தல் தக்கதே. ஆயின், அவரவர் செல்வநிலைக் கேற்பச் செலவு செய்தல் வேண்டும். புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக்கொண்டதுபோல்' செல்வனைப் பார்த்து ஏழையும் செலவழித்துப் பின்பு கடனால் வருந்துவது நன்றன்று. 'கலியாணம் செய்த வீட்டில் ஆறுமாதம் கருப்பு' என்பது பழமொழி. சிலர் திருமணச் செலவால் காலமெல்லாம் கருப்புண்டாக்கிக் கொள்வதுமுண்டு. செல்வன் எவ்வளவு செலவழித்தாலும் அது குணமேயன்றிக் குற்றமன்று. அதனாற் பல தொழிலாளர்க்குப் பிழைப்பு நடக்கும். செலவு செய்தல் வழியாகவே செல்வன் செல்வம் நாட்டிற் பரவ முடியும்.