உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

தமிழர் திருமணம்

திருமணவிழா பல நிகழ்ச்சிகளைக் கொண்டதினால், திட்டமிட்டுச் செலவு செய்யினும் அதற்குமேற் போய்விடும். இதனாலேயே, கலியாணம் பண்ணிப்பார், வீட்டைக் கட்டிப்பார்' என்பர். செலவு எவ்வளவு மேற்படினும் செல்வன் ஏற்றுக்கொள்ள முடியும்; ஏழைக்கு முடியாது. ஆகையால் மிக விழிப்பாயிருந்து சிக்கனமாய்ச் செலவு செய்தல்வேண்டும். அங்ஙனமாயின், ஏழைக்கும் ‘அரைக்காசிலே கலியாணம், அதிலே கொஞ்சம் வாணவேடிக்கை’ நடக்க முடியும். செலவு செய்யப் பணமில்லாவிடத்துச் செலவை நிறுத்த வேண்டுமே யொழியத் திருமணத்தை நிறுத்திவைத்தல் கூடாது.

ஆயின், சில கஞ்சர் செல்வநிலையிருந்தும், 'ஐயாசாமிக்குக் கலியாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு; கொட்டு முழக்குக் கோயிலிலே, வெற்றிலைபாக்குக் கடையிலே' என்றவாறு, திருமண வீட்டிற்கு வந்தவர்க்கும் வெற்றிலை பாக்குக் கூடக் கொடுப்பதில்லை. இது மிகக் கொடிது. மணமக்கள் நீடித்து நல்வாழ்வு வாழ்வதற்கு, எல்லார் நல்லெண்ணமும் வேண்டியதாகும். மணமக்களைப் பிறர் வாழ்த்தும் வாழ்த்திற்கு, மணவீட்டிற் கொடுக்கப்பெறும் எதுவும் ஈடாகாது. சிலர் வெற்றிலை கொடாமை குலமரபென்று போக்குக் காட்டுவர். அஃதுண்மையாயின், அத் தீய வழக்கத்தை உடனே மாற்றிக் கொள்ளல் வேண்டும். இறைவன் திருவருள் போன்றே மக்கள் நல்லெண்ணமும் ஒருவர் நல்வாழ்விற்கு வேண்டியதாம். (11) மணநாளன்றே மணமக்களைக் கூட்டுதல்

சில பெற்றோர், மணத்தின் நோக்கத்தையே உணராது நீண்டகாலமாக இன்பந்துய்த்து வெறுத்த தங்களைப் போன்றே இளமணமக்களையுங் கருதிக்கொள்கின்றனர். களவொழுக்க இன்பம் வாய்க்காத மணமக்கட்கெல்லாம் மணநாளின்பமே சிறந்தது என்பதை அறிதல்வேண்டும். மேலும், மணநாளிற் கூடாமையால், ஒழுக்கக்கேடு, ஐயுறவு, மதியாமை, அன்பின்மை, நீடுகூடி வாழாமை முதலியன இருசாரும் ஏற்படுதற்கிடமாம்.

(12) மணமக்களின் நல்வாழ்வை விரும்பல்

சில பெற்றோர் தம் மகன் மருமகளோடும் மகள் மருமகனோடும் கூடிக் குலவுவதையும், ஓருயிரும் ஈருடலுமாக ஒன்றியிருப்பதையும் விரும்பு வதில்லை. சிறப்பாக, மகள் அங்ஙனம் இருப்பின் அழுக்காறு கொண்டு, 'நீண்டகாலம் பழகிய நம்மை மறந்துவிட்டு நேற்று வந்தவனொடு கூடிக் கொண்டாள் பார்' என்று சொல்வதுண்டு. அன்னவர் கீழ்வரும் கலித்தொகைச் செய்யுட் பகுதியைக் கருத்தூன்றிக் கவனிப்பாராக.

'பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை

மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும் நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே; சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என்செய்யும் தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே;