உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திருமணச் சீர்திருத்தம்

45

பையில் தேங்காய்பழவெற்றிலை கொடுத்தல், பரிசேற்காமை, ஊர்வலமின்மை, கட்டுச்சோற்றுத் திருமணம், இருமணக் கூட்டுச் செலவு, தொகுதிமணம், பதிவுமணம் முதலியன இக்காலத்துப் போற்றத்தக்க புதிய வழக்கங்களாம். 7. போலிச் சீர்திருத்த மணங்கள்

ம்

சிலர் குலம்பார்த்தே மணந்துகொண்டும், பெண்வீட்டில் முன்னமே பிராமணப் புரோகிதனைக் கொண்டு வடமொழிக் கரணம் செய்வித்துவிட்டு, பின்பு மணமகன்வீட்டில் தமிழ்க்கரணம் நடத்திக்கொண்டும் முழுத்த (முகூர்த்த) நாளில் முழுத்த வேளையிலேயே தாலி கட்டிக்கொண்டும், முன்னமே தாலி கட்டிவிட்டுப் பின்பு மோதிரம் அணிவித்துக்கொண்டும், குத்துவிளக்கிற்குப் பதிலாக மின்சார விளக்குப் போட்டுக்கொண்டும், மணத்திற்கென்று மதம் மாறிக் கொண்டும், தம் மணங்களைச் சீர்திருத்த மணங்களென்று கூறிக்கொள்கின்றனர். கடவுள் வழிபாட்டை நீக்கித் தமிழில் நடத்திய அளவிலேயே சீர்திருத்த மணம் ஆகிவிடாது. மணமகள் வீட்டார் சீர்திருத்த மணத்திற்கு இசையாமையாலோ, மணமகன் வீட்டார்க்கு அதில் முழுநம்பிக்கை இல்லாமையாலோ, வடமொழிக் கரணம் முன்னமே நடந்துவிடுகின்றது. அதோடு நிறுத்திக்கொள்வது நல்லது. அங்ஙனமின்றித் தமிழ்க்கரணமும் செய்து மக்களை ஏமாற்றுவது, திருந்தா மணத்தினுந் தீய செயலாகும். வடமொழியின்றித் தமிழ்க்கரணம் மட்டும் நடப்பின் அதை ஓரளவு சீர்திருத்தம் என்னலாம்.

8. பெண்டிர் சமன்மை (சமத்துவம்)

தமிழர் நாகரிகமும் பண்பாடும் அடைந்து பல்லாயிரம் ஆண்டுகளாகியும், இன்னும் பெண்டிர் சமன்மை ஏற்படாதது பெரிதும் இரங்கத்தக்கதே. தமிழரிடைப் பெண் காப்பு மறமில்லையென்று அண்மையில் வடநாட்டா ரொருவர் பழித்ததும் அமைவுடையதே.

இருபாலுள்ளும் ஆண்பாலே ஏற்றமானது என்னும் கொள்கை இன்னும் இருந்துவருகின்றது. ‘சாண் பிள்ளை ஆண்பிள்ளை மாண்பிள்ளை' என்று ஆடவரே தம்மைப் புகழ்ந்துகொள்வது அழகன்று. மணவுறவுபற்றி நடக்கும் சண்டைகளில், நெஞ்சு புண்பட வசையேற்பவர் பெண்வீட்டாரே. 'பெண்ணைப் பெற்றவன் பேச்சுக் கேட்பான்' என்பது பழமொழியாகும்.

மணமகன் எத்துணை மணஞ்செய்திருப்பினும், மறுமணத்தில் புது மணவாளப்பிள்ளையாகவே மதிக்கப்படுகின்றான்; மணமகளோ முதல் மணத்திலேயே தன் கன்னித்தன்மையை இழந்தவளாகக் கருதப்படுகின்றாள். "தோள்நல முண்டு துறக்கப் பட்டோர் வேள்நீ ருண்ட குடையோ ரன்னர்; 'நல்குநர் புரிந்து நலனுணப் பட்டோர் அல்குநர் போகிய வூரோ ரன்னர்;

நலம் - அழகு. துறக்கப்பட்டோர் – கைவிடப்பட்டோர். வேள் - தாகத்தால் விரும்பிய. குடை பனையோலைப் பட்டை. நல்குநர் - அன்புசெய்யுங் காதலர். புரிந்து - விரும்பி. அல்குநர் குடியிருப்போர்.