உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

தமிழர் திருமணம்

சிவநெறியும் மால்நெறியும் தமிழ மதம் என்பதும், கணபதி வணக்கமான காணபத்தியம் பிற்கால ஆரியச் சேர்க்கை என்பதும், என் ‘தமிழர் மதம்' என்னும் நூலில் விரிவாகக் கூறப்பெறும்.

(2) விளக்குவைத்தல்

நாகரிகம் முற்றாத பண்டைக்காலத்தில், ஐம்பூதங்களுள் ஒன்றான தீ இறைவன் அடையாளமாகக் கருதப்பட்டது. அதனால், மணவறையில் குத்துவிளக்கைக் கொளுத்திவைத்தனர். அறிவு மிக்க இக்காலத்திற்கு அக் கருத்து ஏற்காது. அதனால், தாலித்தட்டிற் சூடங்கொளுத்தவும் வேண்டுவதில்லை. (3) அறுகிடல்

சிறுபிள்ளை நிலையிலிருந்த முதுபண்டைமக்கள் மணமக்களை வாழ்த்தியபோது, அவர் குடும்பம் அறுகுபோல் வேரூன்றி உணவுத் தட்டில்லாமல் வாழவேண்டுமென்று குறித்தற்கு, அறுகும் அரிசியும் கலந்து அவர்மீது தூவினர். இன்று அப் பொருள்களின்றியே அக் குறிப்பொடு வாழ்த்த முடியுமாதலின், அவற்றைத் தூவவேண்டுவதில்லை. வீணாக வாரியிறைக்கும் அரிசியை இரப்போர்க்கும் ஏழைமக்கட்கும் அளிப்பின், எத்துணையோ அறப்பயனுண்டாம்.

இங்கு அரிசிக்குக் கூறியது, மணவறையில் வைக்கப்படும் ஏனை மங்கலப் பொருள்கட்கும் ஒக்கும்.

5. திருமண வாழ்த்திதழ்

போலிகை 1

இறைவன் வகுத்த இயற்கை நெறிப்படி, இல்லறமென்னும் நல்லறம் புகுந்த

நண்பர்காள்,

நீங்கள் இன்றே உண்மையான உலக வாழ்க்கை தொடங்கி, நீங்காத வாழ்க்கைக் கூட்டாளியராயினீர். ஓருயிரும் ஈருடலுமாக ஒன்றிய காதலராய், இன்பத்திலும் துன்பத்திலும் வாழ்விலும் தாழ்விலும் ஒருநிலைப்பட்ட உள்ளத்தினராய்,

'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது

99

என வள்ளுவர் வகுத்த வாழ்க்கையினராய், அறிவுடை மக்களை அளவாகப் பெற்று, அளவில் காலம் இன்புற்று வாழ்ந்திருப்பீராக.

போலிகை 2

மாண்புமிக்க மனையறம் புக்க மணமக்காள்,

நீங்களிருவீரும், அன்றிலைப்போல அகலாதிருந்து, இன்பினுக்கெல்லை இம்மையிற் கண்டு, பல்வகைச் செல்வமும் பாங்காயுதவ, வளவனும் வாழ்வரசியுமாய், காவிரி மணலினுங் கழிபலநாள் வாழ்ந்திருக்க.

உங்கள் மரபு, வாழையடி வாழையாய் வழிவழி சிறக்க.