உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு போலிகை 3

55

மன்றல் வாழ்த்துமடல்

இல்லறம் என்னும் இணைவாழ்க்கையேற்ற துணைவர்காள்,

நீங்கள் இருவீரும், காதல் என்னும் பூங்காவில் இன்பம் என்னும் தேனை நுகரும் வண்டுகள். இல்லறம் என்னும் சகடத்தை உலகவாழ்க்கை என்னும் கரட்டுப்பாதையில் இழுத்துச் செல்லும் இளங்காளைகள். ஞாலம் (பூமி) என்னும் பண்ணையில் மக்கள் என்னும் பயிரை வளர்க்கும் உழவர்கள்.

பசியும் பிணியும் பாரில் நீங்கவும், மக்கள் யாவரும் மக்களாய் வாழவும், உங்கள் வாழ்க்கை பயன்படுவதாக.

பால் புளித்தாலும் பகல் இருண்டாலும், உலகம் பெயர்ந்தாலும் உயர்ந்தோர் பிழை செய்தாலும், நீங்கள் நிலைபிறழாது நீடூழி வாழ்ந்திருக்க. போலிகை 4

திருமண வாழ்த்துப் பா

(நேரிசையாசிரியம்)

மங்கலந் தங்கும் மனையறம் மருவும்

ஓருயி ரெனவே ஒன்றிய காதலிற் பல்வகைச் செல்வமும் பாங்கா யுதவ இம்மையின் இன்பத் தெல்லை கண்டே ஏனையர்க் கெல்லாம் இயல்வரை யுதவி உற்றோர் மகிழவும் மற்றோர் புகழவும் வள்ளுவன் நெறியும் தெள்ளிய தமிழும் மாநிலம் எங்கணும் பரவ

வாழியர் நன்கு வையகம் நெடிதே.

6. தாலிகட்டும் வழக்கம் தமிழரதே

ஒரு காதலன் தன் காதலிக்கு, அல்லது ஒரு மணமகன் தன் மணமக ளுக்கு, அல்லது கணவன் தன் மனைவிக்கு, கழுத்தில் தாலி கட்டுவதன் வாயிலாய், அவளைத் தன் வாழ்க்கைத்துணைவி என்று பிறர்க்குக் காட்டுவது, தமிழகத்துத் தொன்றுதொட்ட வழக்கமா யிருந்துவருகின்றது.

கட்டுதல் என்னும் சொல் மணத்தல் என்று பொருள்படுவது, தாலிகட்டும் வழக்கம் பற்றியே. ஓர் இளையானை அல்லது இளையாளை நோக்கி, 'நீ யாரைக் கட்டப்போகிறாய்?' என்று கேட்பது உலக வழக்கு. மணமக்கள் இருவருள்ளும் தாலி கட்டுவது மணமகனும் அவனால் கட்டப்படுவது மணமகளுமா யிருப்பினும், கட்டுதல் என்னும் சொல் மணத்தல் என்னும் பொருளில் வழங்கத் தலைப்பட்டபின், அது இருவர்க்கும் பொதுவான சொல்லாயிற்று.

7