உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கிறித்தவக் கீர்த்தனைகள்

131

மெய்த்தேவனென்று வணங்குங் கிறித்தவர்கள் அவரிலும் எத்துணையோ அதிகமாய் அச் சக்திகளையடையலா மென்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

உத்தம கிறித்தவன் ஒருவன் பிறப்பின் பண்டிகையிலும் உயிர்த்தெழுந்த திருநாளிலுங்கூடக் கிறித்துவின் பாடுகளையே தியானிப்பான். கிறித்து பிறந்ததும் உயிர்த்தெழுந்ததும் முன்னமே ஆயிற்று. அவருடைய பாடுகளினால் மீட்புண்டானதே யன்றிப் பிறப்புயிர்த் தெழுதல்களால் மீட்புண்டாகவில்லை. கிறித்து பிறவாமல் எங்ஙனம் பாடுபட முடியுமென்று சிலர் கேட்பர். அது சரியே, ஆனால் கிறித்து பிறந்தும் பாடுபட்டிராவிடின் அவர் பிறப்பினால் என்ன புண்ணியம்? ஆகவே மீட்புக்குக் காரணம் கிறித்துவின் பாடுகளே யென்பது வெள்ளிடை மலைபோல் விளங்கவில்லையா?

இனி, உயிர்த்தெழுதலோ தெய்வீகத்தா லுண்டானது; மகிமையும் இன்பமும் நிறைந்தது. அதனால் விசுவாசம் மட்டும் சிலர்க்கு உண்டாகும் அல்லது பலப்படும். மீட்போ சிலுவையிலேயே முடிந்துவிட்டது. 'முடிந்தது' என்ற திருவாக்கே இதை வற்புறுத்தும். பிறப்பின் பண்டிகையும், உயிர்த்தெழுந்த திருநாளும் மகிழ்ச்சியும் இன்பமும் விளைக்கத்தக்கவை யாதலின், மீட்பு முழுதும் திரண்டு கிடக்கும் கிறித்துவின் பாடுகளைப்பற்றியும் கிறித்துவை மரணவேதனைப் படுத்தின. தங்கள் பாவங்களைப்பற்றியும் கிறித்தவர்கள் எள்ளளவும் எண்ணாது போகின்றனர். பெரிய வெள்ளிக்கிழமையில் மட்டும் (தங்களுக்காக அல்ல). கிறித் துவுக்காகவே வருந்துவதுபோல் நடிப்பவரும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினத்தில் (ஆத்துமார்த்தமாக அல்ல) சரீரார்த்தமாக அடையும் ஆனந்தத்திற்கு அளவேயில்லை. ஆகையால் இடைவிடாத சிலுவைத் தியானத்தினாலேயே கிறித்தவர்கள் அன்பு, ஊழியம், தியாகம் என்ற மூன்று ஆற்றல்களையும் அடைதல் கூடும் என்பதை யறிந்து கொள்க. ஒவ்வொரு கிறித்தவனும் கிறித்தவர்களையல்ல, கிறித்துவையே பின்பற்றவேண்டும். இதுவே மீட்பின் வழி.

கிறித்துவின் பாடுகளைப்பற்றி வேதநாயக சாத்திரியாரும், இரத்தினப் பரதேசியாரும், பண்டிதர் சத்தியவாசகம் பிள்ளை அவர்களும் இயற்றிய கீர்த்தனைகள் மிகவும் அருமையானவை. அவற்றையும் படிப்பின் ஆத்துமாவிற் கானந்த முண்டாகும்.