உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X

இசைத்தமிழ் கலம்பகம்

குறியீட்டு விளக்கம்

1. பாட்டுறுப்புப் பெயர்கள்

பல்லவி என்னுஞ்சொல் வடமொழியிலின்மையாலும், நீண்ட காலமாய்த் தமிழ்நாட்டுலக வழக்கில் வழங்கிவருவதனாலும், கருநாடக சங்கீதம் என்பது பண்டை இசைத்தமிழின் பெயர் மாற்றமே யாதலாலும், அது இப் பனுவலில் தென்சொல்லாகவே கொள்ளப் பெற்றுள்ளது. துணைப் பல்லவியாலும் பிற வுறுப்புகளாலும் பல்லவி பன்முறையும் அவாவப் பெற்று நிற்பதால் பல்லவாவி என்னும் சொல் பல்லவி என்று மருவி யிருக்கலாம்.

பல்லவிக்குத் துணையாயிருப்பது துணைப் பல்லவி. சரணம் என்னும் வடசொல் அடி அல்லது பாதம் என்னும் பொருள தாகையாலும், அடி (அல்லது பாதம்) என்னும் சொல் தமிழில் வேறு உறுப்புப் பெயராக (அதாவது சரணத்தின் பகுதியைக் குறிக்கும் சொல்லாக) வழங்குவதாலும், பாட்டிற்கு உரு எனும் பெயருண்மை யாலும், சரணம் என்னும் உறுப்பு இங்கு உருவடி எனக் குறிக்கப்பெற்றுள்ளது.

தொகையரா என்னும் உருதுச்சொற்கு, உரைப்பாட்டு என்பது ஒத்த தமிழ்ச்சொல்லாகும்.

2. தாளப் பெயர்கள்

பாணி, தாளம் என்னும் இரண்டும், பண்டை யிசைத்தமிழ் நூல்களில் ஒருபொருட் சொல்லாக ஆளப் பெற்றுள. பாடுவார் கையினால் தட்டுவது பாணி என்றும், ஆடுவார் பாதத்தினால் தட்டுவது தாளம் என்றும் பெயர் பெற்றனவாகத் தெரிகின்றன. பண்- பாE = கை. பண்ணுவது பாணி. பண்ணுதல் செய்தல். பாட்டைக் குறிக்கும் பாணி என்னும் சொல், இராகம் என்று பொருள்படும் பண் என்னும் சொல்லினின்று பிறந்ததாகும். கையைக் குறிக்கும் பாணி என்னும் சொல், கடல்கோளுக்குப்பின் தமிழில் வழக்கற்றது போலும்! வடமொழியில் இச் சொற்கு வேரில்லை. தாள்-தாளம். தாள்-பாதம்.