உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல் வழுக்கள்

9

பூண்டு. அரிவாள்மணையென்பது அரிவாளைப் பதித்திருக்குங் கட்டை. அதைப் போன்ற பூண்டென்பது பொருளற்றது.

ஆமைவடையென்பது, உழுந்துவடைபோல் தட்டையாயிராது ஆமை யோட்டைப்போல் வெளிவளைவாக வுள்ளது. ஆமைத்தாலி, ஆமைப்பூட்டு, ஆமைமடி, ஆமையாழ் முதலிய சொற்களையும் அவை குறிக்கும் பொருள்களின் வடிவையும் நோக்குக.

சட்டி என்பது பெரியது, சிட்டி சிறியது. அகலுக்குச் சிட்டியென்னும் பெயரே பொருந்தும். நெல்லை மாவட்டத்திலும் கிழியஞ்சிட்டியென்றே சொல்வர்.

அரிவாள் என்பது காய்கறிகளைச் சிறிதாய் அரியும் கத்தி அல்லது மணையலகு. அறுவாள் என்பது பெரிதாய் அறுக்கும் அல்லது வெட்டும் கத்தி வகை. பன்னறுவாள், பானையறுவாள், வீச்சறுவாள், வெட்டறுவாள் முதலியவற்றை அறுவாள் என்று சொல்வதே வழக்கம். அரிவாள் என்று சொல்வா ஒருவருமில்லை. கதிரறுப்பெல்லாம் அறுப்பு அறுவடையென்றே சொல்லப்படும். அரிதாள் என்னும் கூட்டுச்சொல்லில் மட்டும், அரி என்னும் சொல் வந்துளது. அது நெல், புல், தினை, வரகு, சாமை போன்ற சிறு பயிர்களின் தாளையே குறிப்பது. "நாக்கரியுந் தயமுகனார்" என்று கம்பர் கூறியது செய்யுள் வழக்கு. அறுவாள் என்னும் சொல் தனித்தேனும் பிற சொல்லொடு சேர்ந்தேனும் அகராதியில் ஓரிடத்திலும் வராதிருப்பது, மிக வியப்பாயிருக்கின்றது.

கம்பர் செய்யுளொன்றில், யாழ், வாழ், பாழ் என்னுஞ் சொற்களுக்கேற்ப, நாள் என்பது நாழ் என்று திரிந்துள்ளது. அது உலகவழக்கிற் கேற்காது. செய்யுளிலும் நாள் என்றிருப்பின் குற்றமன்று. நாழ் என்பது ஏட்டுப்பிழையாகவு மிருக்கலாம். ஆதலால், அவ் வடிவத்தை அகராதியிற் குறித்திருப்பது வழுவாம்.

9. குறிக்கவேண்டாத சொல்லைக் குறித்தல்

கீழ்வருஞ் சொற்களையும் அவை போன்றவற்றையும் அகராதியிற் குறிக்கத் தேவையில்லை.

அணியிழை பெண்.

அழாஅல் அழுகை.

அத்தத்தாவெனல் தந்தையை அப்பப்பா என்றழைத்தல்.

முக்குழிச்சட்டி மூன்று குழியுள்ள பணியாரச்சட்டி.

அணியிழை என்பது ஓர் அன்மொழித்தொகை. இங்ஙனம் நூற்றுக்

கணக்கானவை உள.

அழல் அல்லது அழால் என்பதன் அளபெடை வடிவே அழாஅல் என்பது. ஒற்றைக்குழிச்சட்டி, நாற்குழிச்சட்டி, ஐங்குழிச்சட்டி, அறுகுழிச்சட்டி, ஏழ்குழிச்சட்டி எனப் பன்னிருகுழிச்சட்டிவரை யிருப்பதால், முக்குழிச்சட்டியை விதந்து குறிக்கவேண்டியதில்லை.