உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அகராதியாசிரியர் குறைகள்

41

(காரணம்) ஆவர். அகராதிக் குழுத் தலைவராயிருந்த நால்வருள், பின் மூவரும் பிராமணர். தொடக்கத்தில் அமைந்திருந்த அகராதிக்குழுவில் பல மேனாட்டார் இருந்தாரேனும், அவருடைய அயன்மையும் தனித்தமிழ் கலவைத் தமிழ் வேறுபாடறியாமையும், தமிழிலக்கணப் புலமையின்மையும், அகராதிப் பணியைச் செவ்வனே ஆற்றுதற்குத் தடையாயிருந்தன. அகராதிப் பணிக் குழுவிலிருந்த சமற்கிருதப் பண்டிதர்மட்டுமன்றித் தமிழ்ப் பண்டிதரும், தனித் தமிழாற்றல் அற்றவராகவே யிருந்தனர். அகராதிக் குழுவுறுப்பினருள் ஒருவரான பண்டாரகர் (Dr.) உ.வே. சாமிநாதையரும் தனித்தமிழ்ப் பற்றற்றவரே.

இடைக்கழகக் காலத்திலிருந்தே பிராமணர் தென்னாட்டிற்கு வந்து கொண்டிருந்தும், இற்றைத் தமிழ்நாட்டுப் பிராமணர்க்குப் பெரும்பான்மை தமிழும் சிறுபான்மை தமிழொடு திரவிடமும் தாய்மொழியாயிருந்தும், அவர் முன்னோரது இலக்கிய மொழியாகிய சமற்கிருதத்திலேயே அவர்க்குப் பற்றுளது. என்றும் சமற்கிருதத்தைத் தலைமையாகவும் தமிழை அதற்கு அடிப்படுத்தியும் வைத்தலே அவர்க்கு விருப்பம். தமிழரொடு உறவாடாமை, தமிழ்ச்சொல்லை விரும்பாமை, வடசொல்லையே பெரும்பாலும் வழங்குதலோடு தமிழர் வழக்கிலும் புகுத்துதல், ஆகிய கரணியங்களால் தூய தமிழ் வழக்கை இன்னும் அவர் சரியாய் உணர்ந்து கொள்ளவில்லை. அதனால், நச்சினார்க்கினியர் நகைச்சுவைக்கு ஆரியர் தமிழை எடுத்துக் காட்டியதற்கு இலக்காக, அம்மை போடுதலை அம்மை போட்டுதல் என்று அகராதியிற் குறித்திருக்கின்றனர். பிராமணர்க்குத் தென்னாட்டில் தலைமையான செல்வாக்கு உள்ளவரை அல்லது அவர் உண்மையான தமிழன்பர் ஆகும்வரை, இந் நிலைமையே நீடிக்கும். சமற்கிருதத் தைத் தேவமொழியென்று நம்புதற்கேற்ற பேதைமை பண்டைத் தமிழ்நாட்டில் மிகுதியாய் இருந்ததேனும், இற்றைத் தமிழ்நாட்டில் அத்துணை யில்லை. அறிவு வளர வளரப் பழைய மடநம்பிக்கை படிப்படியாய் ஒழியும். ஆதலால், காலத்தின் இயல்பிற்கேற்ப அவர் தம் கருத்தை மாற்றிக் கொள்க. தன்னலம்பற்றித் தமிழைக் காட்டிக் கொடுக்கும் ஒருசில தமிழ்ப் பேராசிரியரைக் கண்டு, தவற்றில் நிலையற்க. இது அவர்மீது பற்றுவைத்துச் சொல்வதே யன்றிப் பகைகொண்டு சொல்வதன்று. உலக முழுவதையும் தழுவிய ஒரு பெரு வரலாற்றுண்மையை மறைப்பது நன்றன்று.