உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




என் அண்ணாமலை நகர் வாழ்க்கை

53

என்னிடம் சொன்னார்கள். அதற்கேற்ப, பண்டாரகர் (Dr.) மணவாள இராமா னுசம் அவர்கள் அப் பல்கலைக்கழகத் துணைக் கண்காணகராயிருந்தபொழுது, சேலம் நகராட்சிக் கல்லூரிச் சம்பளத்திற்குமேல் ஈராட்டைக் கூடுதல் தருவதாகக் கூறி என்னை அப் பதவிக்கு அழைத்தார்கள். எனக்கு அப் பல்கலைக்கழகத்தின் அற்றை நிலை முற்றும் ஏற்றதா யிருந்ததேனும், வடமொழி வெறியர் ஒருவர் அதற்குத் துணைக் கண்காணகராய் வரக்கூடிய பிற்றை நிலை நோக்கி அப் பதவியளிப்பை ஏற்கவில்லை. நான் அஞ்சியவாறே நேரவுஞ் செய்தது. ஆயினும், ஒரு பல்கலைக்கழகத்திற்குத் தாவக்கூடிய அளவு பேராசிரியர் இராமசாமியார் அவர்களால் உயர்த்தப் பெற்றிருந்த என் நிலைமையெண்ணி மகிழ்ந்தேன்.

1956ஆம் ஆண்டு, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் திரவிட மொழியாராய்ச்சித் துறை சூன் மாதம் ஏற்படுமென்றும், அதற்குத் துணைப் பேராசிரியர் முதலில் அமர்த்தப்பெறுவாரென்றும், முதற்கண் மேற்கொள்ளும் பணி தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி (அகராதி)த் தொகுப்பு என்றும், செய்தித்தாள்களில் வெளியான விளம்பரம் என் உள்ளத்தைக் கவர்ந்தது. தமிழ் வேர்ச்சொல் அகரமுதலி என்னையன்றி வேறெவராலும் தொகுக்க முடியாதாத லானும், என் உற்ற நண்பர் தூண்டுதலானும், ஊக்கங் கொண்டு, துணைப் பேராசிரியப் பதவியினின்று நாளடைவில் பேராசிரியப் பதவிக்கு உயரலாமென்னும் நம்பிக்கையுடன், அப் பதவிக்கு வேண்டுகோள் விடுக்கத் துணிந்தேன்.

இதற்கிடையில், சேலங்கல்லூரி இராமசாமி அவர்கள் மாணவர் விடுதியைத் திறந்துவைக்க அரசவயவர், முத்தையா அவர்கள் சேலம் வந்திருந்தார்கள்; அவ் வமயம், சேலங்கல்லூரி முதல்வர் பேரா. அச்சுதரும், பேரா. சொக்கப்பாவும், பேரா. கோவிந்தராசனாரும் என் தகுதியைப்பற்றி (அண்ணாமலை பல்கலைக்கழக இணைக் கண்காணகர்) அரசவயவர் முத்தையா அவர்களிடம் சிறப்பாய் எடுத்துக் கூறினார்கள். திரு. முத்தையா அவர்களும் வேண்டுகோள் விடுக்கச் சொன்னது மன்றி, அண்ணாமலை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிற்கும் என்னைச் சிறப்பு விருந்தினனாக வரவழைத்தார்கள்.

இதையடுத்து, மதுரைத் தியாகராசர் கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் பண்டாரகர் அரசமாணிக்கனாரும் துணைத் தமிழ்ப் பேராசிரியர் ஒளவை சு. துரைசாமி அவர்களும் எனக்காக அண்ணாமலை பல்கலைக்கழக இணைக் கண்காணகர்க்கும் துணைக் கண்காணகர்க்கும் பரிந்தெழுதி யிருப்பதாகக் கேள்விப்பட்டேன். நான் அப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா விற்குச் சென்றிருந்த பொழுது துணைக் கண்காணகர் திரு. T.M. நாராயணசாமி அவர்கள் என்னிடம் “உங்களைப்பற்றி அரசமாணிக்கனாரும், ஔவை சு. துரை சாமி அவர்களும் எழுதியிருக்கிறார்கள். அதனால், எனக்கென்ன தமிழ் தெரியும்? சேதுவும் (தெ. பொ.) மீனாட்சிசுந்தரம் அவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தாம் கவனிக்க வேண்டும்" என்று சொல்லிவிட்டார்கள். அதினின்று எனக்குள்ள வாய்ப்பியல்பை உய்த்துணர்ந்து கொண்டேன்.

திருச்சிராப்பள்ளி முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் சென்றவிட மெங்கும் பேசும்பொழுதெல்லாம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழ்ச்