உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

பணிசெயற் படலம் 2ஆம் பகுதி

அண்ணாமலை பல்கலைக்கழகத் திராவிட மொழியியற் குழுவின் முதற் கூட்டத்தில் முடிபு செய்தவாறு, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்மொழிக்கும் ஒவ்வொரு விரிவுரையாளரை அமர்த்த முயற்சி தொடங்கியது. முதற்கண் திருவாளர் இராதாகிருட்டிணனார் (எம்.ஏ.) தமிழுக்கு அமர்த்தப் பெற்றார். இவர் பூனாத் தெக்காணக் கல்லூரி நடத்திவரும் வேனிற் பள்ளியிலும் (இலை) உதிர்காலப் பள்ளியிலும் வண்ணனை மொழியியற் பயிற்சி பெற்றவர். நானும், எனக்குப் பணிக்கப்பட்டவாறு, நான் தொகுக்கவிருந்த தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியின் போலிகையாக, ஐம்பது சொற்கட்கு வேரும் வரலாறும் பொருளும் விளக்கமும் எழுதத் தொடங்கினேன்.

வழக்கப்படி, தெக்காணக் கல்லூரியின் வேனில் மொழியியற்பள்ளி மேழ (சித்திரை) மாத நடுவில் (அதாவது மே மாத முதலாம் பக்கல் தொடங்குமென அறிவிப்பு வந்தது. என் மொழிநூற் கல்விப் பரப்பையும் ஆராய்ச்சி யாழத்தையும் நிலைத்த கொள்கையையும் மாறா மனப்பான்மையையும் வாழ்க்கைக் குறிக்கோளையும் அறியாத என் எதிரிகள், என்னைத் தம்வழித் திருப்புமாறு, துணைக் கண்காணகர் திரு. நாராயணசாமியார் அவர்களிடம் சென்று, என்னை மேற்குறித்த வேனில் மொழியியற் பள்ளிக்குப் பயிற்சிபெற அனுப்ப வேண்டு மென்று வேண்டியதாகத் தெரிகின்றது. துணைக் கண்காணகரும் என் விருப்பத்தை வினவினார்கள். இறைவனருளால், அற்றைப் பள்ளி தேராதூனில் (Dehra Dun) நடைபெற்றது. பல்வகைப் பயனையும் முன்னோக்கிப் பெருமகிழ்ச்சியுடன் உடனே இசைந்தேன்.

பின்பு, இருதிசை வழிச்செலவிற்கும் ஒன்றரை மாதத் தங்கற்கும் பல்கலைக்கழகத்திற் பணம் பெற்றுக்கொண்டு, தேராதூன் சென்றேன். பல்வேறு நாட்டினரும் பல்வேறு மொழியினரும் பல்வேறு மதத்தினரும் பல்வேறு இனத்தினரும் பல்வேறு குலத்தினருமான ஆசிரியரும் மாணவரும், அங்கு ஒன்று கூடி உடன்பிறப்புப்போற் பழகியது மிக்க மகிழ்ச்சியைத் தந்து கிளர்ச்சியை உண்டு பண்ணியது.

வண்ணனை மொழியியல் என்ன வென்பது ஏற்கெனவே அறிஞர் கிளீசன் எழுதிய வண்ணனை மொழியியற் புகுநூல் (An Introduction to Descriptive Linguistics) வாயிலாய் அறிந்திருந்தேனெனினும். அதன் முழுப்பரப்பையும் பயிற்சி முறையையும் தேராதூன் பள்ளியில்தான் தெளிவாகக் கண்டேன். கடவை (Course) யிறுதியில் நிகழ்ந்த தேர்விலும் தேறினேன். ஆயின், அஃது எனக்கும் உண்மையான மொழிநூற்கும் பயன்படுவதன்று. வடநாட்டு மக்களின் வாழ்க்கை முறையும் மொழிவழக்கும், ஆக்ரா (Agra) தில்லி (Delhi)க் காட்சிகளும் கங்கையாறும் பனிமலையும் பற்றிய அறிவே, இவ் வுலகில் எனக்கு என்றும் பயன் தரும். இதுபற்றி என் எதிரிகட்கும் நன்றிகூறும் கடப்பாடுடையேன்.