உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

வடசொல்லென மயங்குந் தொல்காப்பியத் தென்சொற்கள்

உலகத்திலுள்ள மக்களெல்லாம் ஒருதாய் வயிற்றினரென்று சரித்திர ஆராய்ச்சியால் தெளிவாகின்றது. தமிழர், தெலுங்கர், கருநடர், மலையாளர், துளுவர் முதலிய திராவிட வகுப்பினரெல்லாரும் எங்ஙனம் ஒரு காலத்தில் ஒரு வகுப்பினரா யிருந்தனரோ, அங்ஙனமே துரேனியர், சேமியர், ஆரியர் என்னும் முப்பெருங் கிளையினரும் ஒரு காலத்தில் ஒரே வகுப்பினரா யிருந்திருக்கின்றனர். மக்கள் வகுப்புத் திரியத் திரிய அவர்கள் மொழியுந் திரிந்துகொண்டே வந்திருக்கின்றது. படைப்புக் காலந்தொட்டு ஒரு வகுப்பார் பிற வகுப்பாருடன் கலவாது பிரிந்திருந்தாலொழிய அவர்கள் மொழி தனிமொழியா யிருத்தல் எட்டுணையும் கூடாததாகும். பெற்றோர் மொழிகளையே பிள்ளைகளும் பேசுகின்றனர். உறவினரெல்லாரும் ஒரு மொழியே பேசுதல் இயல்பு. ஆகவே, இயைபுடைய வகுப்பின ரெல்லாம் இயைபுடைய மொழிகளையே பேசல் வேண்டும். சமற்கிருத ஆரியர் மூவகை மொழிகளும் கலக்கின்ற மேலையாசியாவின் வடபுறத்தில் ஆதியிற் குடியிருந்தனர். அங்கிருந்து அவர்கள் வடஇந்தியாவிற்கு வருமுன்னரே அவர்கள் மொழியில் பிறமொழிச் சொற்கள் எண்ணிறந்தன கலந்துவிட்டன. ஆரிய வருகைப்போது இந்து தேய முழுதும் வழங்கி வந்தவை திருந்தினவும் திருந்தாதனவுமான திராவிட மொழிகளே. ஆரியர்கள் வட இந்தியாவி லிருக்கும்போது பல திராவிடச் சொற்களும் தென்னாட்டிற் குடியேறியபின் வேறு பல திராவிடச் சொற்களும் சமற்கிருதத்திற் கலந்துவிட்டன. தமிழ்க்கல்வி தலைதாழ்த்துச் சரித்திர அறிவும் மொழிநூலாராய்ச்சியும் இல்லாத இடைக்காலத்து, சமற்கிருதமே இந்திய மொழிகட் கெல்லாம் தாய் என்னுமோர் படிற்றுரை தமிழ்ப் பகைஞரால் தமிழ்நாட்டிலும் பரப்பப்பட்டது. சமற்கிருத அகராதியிலுள்ள சொற்களெல்லாம் சமற்கிருதமே யென்னுங் குருட்டு நம்பிக்கை தமிழருள்ளத்திலும் குடிகொண்டது. மேனாட்டுக் கலைச்சுடர் மேம்பட்டுத் திகழும் இக்காலத்துங்கூடப் பல தூய தென்சொற்களை வடசொல்லென மயங்குகின்றனர் பேரறிஞராயினாரும். தமிழ், உலகத் தாய்மொழியின் இயற்கை வடிவும் சமற்கிருதம் அதன் செயற்கை வடிவுமாதலின், அவ் விரு