உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தென்சொற் கட்டுரைகள் தேர், திருவிழா, பறவை, விலங்கு, மேலாடை, இல்லம்புகல், சாப்பாட்டுக் கடை, வலம்வரல், சிலம்பு கழித்தல் அல்லது, காப்புக் கழற்றல், நீடுவாழி, மூத்த மகன், தம்மரசு, இருமையும் ஒத்து என்னும் செந்தமிழ்ச் சொற் களுக்கும் சொற்றொடர்களுக்கும் முறையே, வருஷம், பிரயாசை, வார்த்தை, விஷம், சந்தோஷம், வியாதி, இஷ்டம், லாபம், நஷ்டம், கஷ்டம், சந்திரன், உபாத்தியாயர், ஆலயம், ஜலம், அபிஷேகம், ஸ்நானம், சாதம், ரதம், உற்சவம், பக்ஷி, மிருகம், அங்கவஸ்திரம், கிருகப்பிரவேசம், போஜனசாலை, பிரதக்ஷிணம் (செய்தல்), கங்கண விஸர்ஜனம், சிரஞ்சீவி, ஜேஷ்ட குமாரன், சுயராஜ்யம், உபயானு சம்மதமாய் என்னும் வடமொழிச் சொற்களும் சொற்றொடர்களும் வழங்கிவருகின்றன. இங்ஙனம் தமிழில் வழங்கும் வடசொற்களும் சொற்றொடர்களும் பன்னூற்றுக் கணக்கின. இவை போன்றவையே பன்னிரு மாதங்கட்கும் இருபத்தேழு நட்சத்திரங்கட்கும் இதுபோது வழங்கும் வடசொற்களும் என்க.

நட்சத்திரம் தமிழில் நாள் அல்லது நாண்மீன் எனப்படும். பொதுவானதாயின் மீன் என்றும் உடு என்றும் வெள்ளி என்றும் கூறப்படும். ஒரு பகலும் ஓர் இரவுஞ் சேர்ந்து ஒரு கிழமை. ஒரு கிழமைக்குரிய நட்சத்திரம் நாள். "நாளும் கிழமையும் நலிந்தோர்க் கில்லை" என்றார் ஔவையார். ஆயினும், நாள் என்பது கிழமை யென்னும் பொருளிலேயே இருவகை வழக்கிலும் பெரும்பாலும் வழங்கிவரும். கிரகம் கோள் அல்லது கோண்மீன் எனப்படும்.

அறுபதாண்டிற் கொருமுறையாக நிகழ்ந்த சில பஞ்சங்கள்பற்றி, அல்லது மக்களின் சராசரி வாழ்நாள்பற்றி, அறுபதாண்டு என்னும் அளவு பண்டைத் தமிழ்நாட்டில் சில முதியோர்க்குள் பெயரளவாய் மட்டும் வழங்கி வந்ததாகத் தெரிகின்றது. அது நடைமுறையிற் கணிக்கப்படவில்லை. சாலிவாகனனாலேயே அறுபதாண்டிற்கும் பெயரிடப்பட்டதாகத் தெரி கின்றது. அவை யாவும் வடசொற்கள். அவற்றுக்குத் தென்சொல் இல்லை. அறுபதாண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருதலின், அது ஆங்கில ஆண்டு போலச் சரித்திரத்திற்கும் நெடுங்காலக் குறிப்பிற்கும் பயன்படுவதன்று. பண்டைத் தமிழர் அவ்வவ் வரசரின் ஆட்சிக் காலத்தைக்கொண்டே ஓர் ஆண்டையோ நெடுங்காலத்தையோ குறித்தும் கணக்கிட்டும் வந்ததாகக் கல்வெட்டினின்றும் தெரியவருகின்றது. (எ-டு: கோப்பரகேசரி மாற வர்மனுக்கு 24ஆம் ஆண்டு). ஒரு நெடுங்காலத்தைக் கணக்கிடுவதற்குப் பல அரசர்களின் ஆட்சிக் காலத்தைக் கூட்டவேண்டியதிருக்கும். ஏனெனில் அடிக்கடி அரசர் மாறுவது வழக்கம். (சரித்திரகாலத்தில்) ஓர் அரசன் எவ்வளவு நீடித்தாளினும் நூறாண்டிற்கு மேற்படுவது மிகவும் அருமை. இக் குறையை நீக்குதற்கு ஒரு பெரியார் காலத்தினின்று, அல்லது ஒரு நகரத் தோற்றத்தினின்று, அல்லது ஒரு பெரு நிகழ்ச்சியினின்று நெடுங்காலத்தைக் கணக்கிட்டு வந்திருக்கின்றனர். இவற்றுக்கு முறையே மெய்கண்டான்