98
திருக்குறள்
தமிழ் மரபுரை
வேந்தற் குற்றுழிப் பிரிவாவது, குறுநில வரசராகிய வேளிரும் மன்னரும் நம் தலைவராகிய வேந்தரென்னும் பெருநிலவரசர்க்குப் போர்வினை வந்த விடத்து, அவருக்குத் துணையாகச் செல்லுதல். 'மனை' ஆகுபெயர். வினை முடியுமுன் கூறிய கூற்றாதலின் விதும்பலாயிற்று. "பிறரெல்லாம் இதனைத் தலைமகள் கூற்றாக்கி யுரைத்தார். தலைமகனைக் கூறாது வேந்தன் வெல்க வென்றும் மனைகலந்தென்றும் மாலைப் பொழுதின்கண் விருந்தயர்க மென்றும், வந்த அவ் வுரைதானே அது கூடாமைக்குக் கரியாயிற்று " என்று பரிமேலழகர் கூறியிருப்பது சரியே. 'பிறரெல்லாம்' என்றது மணக்குடவ பரிதி காலிங்க பரிப்பெருமாளரை.
1269.
ஒருநா ளெழுநாள்போற் செல்லுஞ்சேட் சென்றார் வருநாள்வைத் தேங்கு பவர்க்கு.
(இதுவுமது.)
நெடுந்
(இ-ரை.) சேண் சென்றார் வருநாள் வைத்து ஏங்குபவர்க்கு தொலைவு சென்ற தம் காதலர் திரும்பி வருவதாகக் குறித்த நாளை மனத்துட் கொண்டு, அது வருமளவும் ஏக்கம் பிடித்து வருந்தும் மகளிர்க்கு; ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் - ஒரு நாளே பலநாள் போல் நெடிதாகத் தோன்றும்.
ஏழு என்னும் நிறைவெண் இங்குக் கழிபன்மை யுணர்த்தி நின்றது. முன்பு தலைமகள் பட்டறிவையறிந்த தலைமகன் அதைப் பொதுப்படுத்திக் கூறியவாறு. இருநாளென்று பாடமோதுவாரும் இருந்தமை பரிமேலழக ருரையால் தெரியவருகின்றது.
1270.
பெறினென்னாம் பெற்றக்கா லென்னா முறினென்னா முள்ள முடைந்துக்கக் கால்.
(இதுவுமது.)
—
(இ-ரை.) உள்ளம் உடைந்து உக்கக்கால் - காதலி நம் பிரிவை யாற்றாது உள்ளமுடைந்து இறந்துபட்டபின்; பெறின் என் ஆம் நம்மைத் தப்பாது பெறக்கூடிய நிலைமைய ளானால்தான் என்ன பயன்? பெற்றக்கால் என் ஆம் அதற்குமேல், உண்மையில் நம்மைப் பெற்றாலுந்தான் என்ன பயன்? உறின் என் ஆம் - இனி, அதற்கும்மேல், நம்மொடு உடம்பொன்றிக் கலந்தாலுந்தான் என்ன பயன்? இவையொன்றாலும் ஒரு பயனுமில்லையே?